Sundar C: நடிகராக ஜெயிக்காமல்போன காரணம்.. வெளிப்படையாக பேசிய இயக்குநர் சுந்தர்.சி
ஒரு நடிகராக இன்னொரு இயக்குநரின் படங்களில் நடிக்கும்போது, தப்பாக இருப்பதாக தோன்றினாலும், இயக்குநருக்கான நடிகன் என்பதால் எதுவும் பேசாமல் இருப்பேன்.
"ஒரு நடிகராக நான் தோற்று போனவன்தான்" என இயக்குநர் சுந்தர். சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முறை மாமன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரான அறிமுகமானார் சுந்தர்.சி. தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், மேட்டுக்குடி, ஜானகிராமன், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத்தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, அழகர்சாமி, கண்ணன் வருவான், உன்னை கண் தேடுதே, உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அழகான நாட்கள், அன்பே சிவம், வின்னர், கிரி,லண்டன், தகதிமிதா, சின்னா, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு , தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, அரண்மனை 2, கலகலப்பு 2, ஆம்பள, அரண்மனை 3, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்ஷன், காஃபி வித் காதல், என கிட்டதட்ட 30 படங்களை இயக்கியுள்ளார்.
சுந்தர் சி தற்போது அரண்மனை 4 என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த மே 3 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இயக்குநராக ஜெயித்த சுந்தர் சி தலைநகரம் படம் மூலம் நடிகராகவும் எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து வீராப்பு, சண்ட, தீ, ஆயுதம் செய்வோம், பெருமாள், ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, முரட்டுக்காளை, முத்தின கத்திரிக்காய், பட்டாம்பூச்சி, இருட்டு உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இவர் நேர்காணல் ஒன்றில் பேசும்போது, “ஒரு நடிகராக நான் தோற்று போனவன் தான். அதற்கான காரணத்தை சொல்கிறேன். என்னுடைய முதல் 3 படங்களான தலைநகரம், வீராப்பு, சண்டை ஆகிய படங்களில் ஹீரோவாக எனக்கு நன்றாக போச்சு. அதன்பிறகு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்டால் மிகப்பெரிய சந்தோஷம் வருவது போல எனக்கு இருந்தது. நான்கு பக்கமும் நடிப்பதற்கு படங்கள் வந்தது. வந்த படங்கள் எல்லாம் நடிக்க ஒப்புக்கொண்டேன். கிட்டதட்ட 8 படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியது. இதன்பிறகு நடிப்பே வேண்டாம் என முடிவு செய்தேன்.
இயக்குநராக எனக்கென ஒரு சௌகரியான நிலை இருந்தது. ஒரு நடிகராக இன்னொரு இயக்குநரின் படங்களில் நடிக்கும்போது தப்பாக இருப்பதாக தோன்றினாலும் இயக்குநருக்கான நடிகன் என்பதால் எதுவும் பேசாமல் இருப்பேன். அப்படி நடிப்பே வேண்டாம் என முடிவு செய்து இயக்குநர் பக்கம் சென்று எடுத்த படம் தான் கலகலப்பு. என்னை ஹீரோவாக நினைத்துக் கொண்டது. அப்படிப்பட்டவனாக நான் தோற்றவன் தான்” என சுந்தர் சி. தெரிவித்துள்ளார்.