Selvaraghavan : ரெண்டுபேரும் சூப்பர் நடிகர்கள்...இளம் நடிகர்களை தட்டிக்கொடுத்த செல்வராகவன்
நடிகர் மணிகண்டன் மற்றும் நடிகர் கவினை இயக்குநர் செல்வராகவன் பாராட்டியுள்ளார்
ரசிகர்கள் மனம் கவரும் இளம் நடிகர்கள்
தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்கள் தலைதூக்கி விட்டார்கள். ரஜினி , கமல் , விஜய் , அஜித் போன்ற பெரிய ஸ்டார்கள் வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்து வருகிறார்கள். இதில் நடிகர் விஜய் கூடிய விரைவில் சினிமாவில் இருந்து வெளியேற இருக்கிறார் . அடுத்து சில படங்களில் ரஜினியும் தனது கடைசி படத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் சிறந்த கதைகள் மற்றும் நடிப்பு வழியாக மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார்கள்.
இதில் முக்கியமான இருவர் என்று நடிகர் மணிகண்டன் மற்றும் கவின் ஆகிய இருவரை குறிப்பிடலாம். இந்த இரு நடிகர்களையும் இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார்.
மணிகண்டன், கவினை பாராட்டிய செல்வராகவன்
தனது எக்ஸ் பக்கத்தில் செல்வராகவன் இப்படி கூறியுள்ளார் ”மணிகண்டன் மற்றும் கவின் ஆகிய இருவரும் அற்புதமான நடிகர்கள். இவர்கள் இருவரைப் பற்றியும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை மிக எளிதாக நடிக்கக்கூடிய திறமை உள்ளவர்கள். இது தமிழ் சினிமாவிற்கு ரொம்ப நல்லது” என்று அவர் கூறியுள்ளார்
மணிகண்டன்
மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கவனம் பெற்றது. இந்த ஆண்டு வெளியான லவ்வர் படமும் சிறப்பான வெற்றிபெற்றுள்ளது.
இரண்டு படங்களிலும் மணிகண்டனின் நடிப்பு அனைவராலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்தப் படங்களில் நடித்து தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார் மணிகண்டன்
கவின்
தொலைகாட்சித் தொடர்களில் வந்த கவின் டாடா படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து தற்போது இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்துள்ளார் கவின். ஸ்டார் படம் மூன்றே நாட்களில் 15 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தில் கவினின் நடிப்பு அனைவராலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. ஸ்டார் படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பக்கர் படத்தில் நடித்து வருகிறார் கவின்.
Nothing beats earning the trust of someone you've been watching and inspiring. I will certainly justify the trust you've placed in me sir. @selvaraghavan sir 🙏🏼♥️ https://t.co/qA6vudb9b4
— Kavin (@Kavin_m_0431) May 12, 2024
இயக்குநர் செல்வராகவன் தங்களைப் பாராட்டியது குறித்து இரு நடிகர்களும் மனம் மகிழ்ந்து செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்