கலாச்சாரத்தை சீரழித்து படம் எடுப்பவர்களை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்..இயக்குநர் பேரரசு ஆவேசம்
"நீங்கள் ஆக்சன், காமெடி, ஃபேமிலி, ஜாதி, திரில்லர் என எந்த படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும்." - பேரரசு

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில்,இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
நாயகி ஆஸ்னா சவேரி பேசும்போது
“இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவே சந்தோஷம். வள்ளுவன் படத்தில் எமோஷன், ஃப்ரண்ட்ஷிப், சஸ்பென்ஸ், திரில்லர், நிறைய டுவிஸ்ட் என எல்லாமே இருக்கிறது. நீங்கள் செலவழிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயம் ஒர்த் ஆக இந்த படம் இருக்கும்” என்று பேசினார்.
நாயகன் சேத்தன் சீனு பேசும்போது
“கடந்த 15 வருடங்களாக திரையுலகில் ஒரு முக்கிய இடத்திற்காக போராடி வருகிறேன். இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இதே இடத்தில் தான் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், நாயகன் ஜெயம் ரவி என பல பிரபலங்கள் கலந்து கொண்டு அரங்கமே நிறைந்து இருந்தது. அதன் பிறகு நான் சிவப்பு மனிதன் சக்சஸ் மீட்டை இங்கேதான் கொண்டாடினோம். தற்போது கே.டி குஞ்சுமோனின் ஜென்டில்மேன்-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருங்காலி படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அண்ணா வீட்டிலிருந்து, தல அஜித் வீடு வரை எத்தனை கம்பெனிகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஏறி இறங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் வெள்ளையாக இருக்கிறீர்கள். தமிழுக்கு செட் ஆக மாட்டீர்கள் என்று சொன்னபோது, எனக்கு மனதுக்குள் பயம் வந்தது. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கமல்ஹாசன், அஜித் எல்லோரும் வெள்ளை நிறம் தான். இங்கே கலர் என்பது ஒரு பிரச்சனை இல்லை. திறமையை மட்டும் தான் பார்க்க வேண்டும்.
நான் ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பே இந்த படத்தின் கதையை சங்கர் சாரதி என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டதுமே ஷங்கருக்கு எப்படி ஜென்டில்மேன் படம் ஒரு பிராண்ட் நேம் ஆகியதோ அதேபோல இந்த வள்ளுவன் திரைப்படம் இந்த சங்கர் சாரதிக்கு ஒரு பிராண்ட் ஆகும் என்று கூறினேன். அதன் பிறகு தான் ஜென்டில்மேன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆனேன். அந்த வகையில் யூனிவர்ஸ் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உயிரைக் கொடுத்து நடித்தோம் என்று சிலர் சொல்வார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். என்னால் உள்ளே நுழைய முடியாத ஒரு ட்ரம்முக்குள் என்னை அமர வைத்து அதற்குள் புகையையும் போட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட உயிர் போய்விட்டது என்று தான் நினைத்தேன். சிக்மகளூர் தாண்டி ஒரு பாடல் காட்சிக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது நானும் கதாநாயகி ஆஸ்னா சவேரியும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்தது அது புலிகள் அதிகம் உலாவும் இடம் என்று. அப்போதும் உயிர் தப்பித்து வந்தோம். ஒரு சின்ன படமாக ஆரம்பித்து இதை பெரிய படமாக கொடுத்திருக்கிறார்கள்.. நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்று பேசினார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது
“வள்ளுவன் என இந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி ஒரு ஆன்மீகவாதி. அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான டைட்டிலை அவரால் வைக்க முடிந்திருக்கிறது. வள்ளுவர் கையில் உள்ள எழுத்தாணியை எடுத்துவிட்டு கத்தியை கொடுத்திருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால் அவர் கத்தியை அல்ல துப்பாக்கியைத்தான் எடுத்து இருப்பார். இந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் அநியாயம், அக்கிரமம்.. கொலை, கற்பழிப்பு.. வள்ளுவன் என டைட்டில் வைத்ததற்கே உங்களை பாராட்டவேண்டும்.. ஏனென்றால் இப்போது இளைஞர்களுக்காக, டிரெண்டுக்காக வைக்கிறேன் என ஏதோ ஒன்றை வாந்தி எடுக்காமல் தமிழ் பற்றோடு ஒரு டைட்டிலுடன் படத்தை எடுத்திருக்கிறீர்கள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி மாறும்போது வேறு எதில் மாற்றம் வருகிறதோ இல்லையா பேருந்து கலர்கள் தான் உடனடியாக மாற்றப்படும். முந்தைய தலைவர்களின் பெயர்களில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் சுருக்கப்படும். வள்ளுவரை மட்டும்தான் விட்டு வைத்திருந்தார்கள். ஒரு ஆட்சி வந்ததும் அவர் நெற்றியில் இருந்த பட்டையை முதலில் அழித்தது. இன்னொரு ஆட்சி வந்ததும் அவருக்கு காவி கலர் வேட்டியை உடுத்தியது. அரசியல் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. திருவள்ளுவர் இப்போது வந்தால் இயக்குநர் கத்தியைக் கொடுக்கத் தேவையில்லை. அவரே துப்பாக்கியைத் தூக்கி விடுவார்.. நாடு அப்படி இருக்கிறது. என்னிடம் பதவி இருக்கிறது, பணம் இருக்கிறது, என்னிடம் சட்ட நுணுக்கம் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்தால் சட்டத்தையே விலைக்கு வாங்கலாம்.. ஏன் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என இந்த காலகட்டத்தில் இந்த வசனத்தை சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். நீதிபதியை விமர்சித்தாலே தூக்கி உள்ளே வைத்து விடுகிறார்கள். நீதிபதி என்ன கடவுளா ? அரசனே தவறு செய்கிறான்.. ஆண்டவனே தவறு செய்கிறான்..
நான் சிவகாசி படம் எடுத்த போது வக்கீல்களை கிண்டல் செய்வதாக என் மீது தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் நடித்ததற்காக விஜய் மீதும், தயாரிப்பாளர் மீதும் கூட வழக்கு தொடர்ந்தார்கள். அப்படி ஒரு வக்கீலை நான் குறைவாக காட்டியதற்காக எங்கள் மூன்று பேர் மீது வழக்கு போட்டார்கள் என்றால் இப்போது இயக்குநர் சங்கர் சார்பில் இந்த படத்தில் ஒரு வக்கீல் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என்று சொல்கிறார் என்றால் உண்மையிலேயே இவர் 100 பேரரசுக்கு சமம். ஒரு இயக்குநருக்கு மக்கள் மீது அக்கறை, நாட்டுப்பற்று இருக்க வேண்டும்.. நீங்கள் ஆக்சன், காமெடி, ஃபேமிலி, ஜாதி, திரில்லர் என எந்த படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும். கலாச்சாரத்தை சீரழித்து படம் எடுப்பவர்களை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்.. பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ தொழில் இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் சங்கர் சாரதியை நான் ரொம்பவே பாராட்டுகிறேன். ஆன்மீகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.





















