‛ஆண்டுக்கு ஒரு முறை தான் மனைவியிடம் பேசுறேன்...’ தான் மிஸ் செய்ததை உடைத்த மிஸ்கின்!
‛‛சினிமாவில் எனக்கு அவர் கொடுத்த சுதந்திரம், வேறு யாரும் அந்த சுதந்திரத்தை தரவில்லை. போன் கூட பண்ண மாட்டாங்க..’’
தனக்கென் ஒரு பாதை, தனக்கென் ஒரு பயணம், தனக்கென ஒரு கதை என எல்லாமே, தனக்கானதாய் வைத்திருக்கும் இயக்குனர் மிஸ்கின், படைப்புகளிலும் அதே பாதையில் பயணிக்கிறார். மிஸ்கினின் படைப்புகளால் கவர்ந்த ஒரு பெரிய கூட்டம் இங்கு உள்ளது. இன்னும் பலருக்கு ரோல் மாடலாக மிஸ்கின் இருக்கிறார். தமிழ் சினிமாவின் இன்னொரு தவிர்க்க முடியாத இயக்குனர் என்கிற அந்தஸ்தையும் அவர் பெற்றிருக்கிறார். இந்நிலையில், மிஸ்கின் விகடன் இணையத்திற்கு வீடியோ பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், தனது மனைவி மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். இதோ அந்த பேட்டி...
பார்த்தோம்.. காதலித்தோம்!
‛‛என்னுடைய வாழ்க்கையை அறிந்து கொள்வது மற்றவர்களுக்கு ஆர்வத்தை தருமா எனத் தெரியவில்லை. என் மனைவியைப் பார்த்தேன், காதல் வயப்பட்டேன், கல்யாணம் பண்ணோம், கொஞ்ச நாள்ல பிரிஞ்சிட்டோம். அவங்க ரொம்ப நல்லவங்க. ரொம்ப அன்பானவங்க. என்னுடைய மகளை, இன்னும் பத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
எல்லா தப்பும் என் மேலே தான்!
நானும் ஒரு கணவராக என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கொண்டிருக்கிறேன். சேரவில்லை, அவ்வளவு தான். சேராததற்கு எந்த காரணமும் இல்லை. சினிமாவிற்கு வந்துட்டேன், அப்படியே போயிடுச்சு. அவங்க மேல எந்த தப்பும் இல்லை. என் மேல தான் எல்லா தப்பும். நான் பிரிஞ்சிட்டேன். இன்னும் அன்போடு என் மகளை பார்த்துக்கிறாங்க. என்னையும் அன்போடு தான் நேசிச்சுட்டு இருக்காங்க. நானும் சினிமாவில் இப்படியே உருண்டோடி வந்துட்டேன்.
பைபிள் வாழ்க்கை!
சினிமாவில் எனக்கு அவர் கொடுத்த சுதந்திரம், வேறு யாரும் அந்த சுதந்திரத்தை தரவில்லை. போன் கூட பண்ண மாட்டாங்க. ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தான் என்னிடம் பேசுவாங்க. அதுவும் மகள் தொடர்பானதாக இருக்கும். ரொம்ப தயங்கி தயங்கி தான் என்னிடம் பேசுவாங்க. அப்படி தான் அந்த தாய் வாழ்கிறார். ஒரு பைபிள் மாதிரி தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமானால், நான் எமோஷன் ஆகிவிடுவேன்.
நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன்!
வாழ்க்கையில் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு பெண்ணை பார்ப்பேனா எனத் தெரியவில்லை,’’
இவ்வாறு அந்த பேட்டியில் மிஸ்கின் பேசியுள்ளார். பிரபலங்களில் குடும்ப பின்னணி பெரும்பாலும் மோசமான பக்கங்களை கொண்டதாகவே இருக்கும். ஆனால், மிஸ்கின், அதிலிருந்தும் வேறுபட்டு தன் பிரிவை வெளிப்படையாக பேசியிருப்பதும், அதற்கான பழியை தன் மீது சுமத்திக் கொள்வதும் அவரை நியாயவாதியாக காட்டுகிறது.