Mari Selvaraj - Maamannan : 'எத்தனை படம் எடுத்தாலும், சமூகநீதி அதுல இருக்கும்’ : மாமன்னன் ஆடியோ விழாவில் மாரி செல்வராஜ்
நிச்சயமாக இந்தப் படமும் என்னுடைய வாழ்வியல் சம்பந்தப்பட்ட சமூக நீதி பேசக்கூடிய படமாக தான் இருக்கும் என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது, இந்நிலையில் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் வரிசையாக நட்சத்திரங்கள் பங்கு பெற்று பேசி வருகின்றனர்.
அந்த வகையில் மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: "என்ன ஜானர் படம் எடுத்தாலும் அதில் கண்டிப்பா சமூக நீதி இருக்க வேண்டுமென நினைப்பேன்.
நிச்சயமாக இந்தப் படமும் என்னுடைய வாழ்வியல் சம்பந்தப்பட்ட சமூக நீதி பேசக்கூடிய படமாக தான் இருக்கும். நிச்சயமாக இந்தப் படம் என்றில்லை, நான் எத்தனை படம் எடுத்தாலும், எத்தனை ஜானரில் படம் எடுத்தாலும் என்னுடைய சமூக நீதிக்கான அரசியல் கண்டிப்பாக அதில் இருக்கும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் பேசிய கேள்விக்கு பதிலளித்த மாரி செல்வராஜ், “படம் பார்த்த பின் கேளுங்கள், மாமன்னன் வந்த பின் நிறைய அதிர்வலைகளை ஏற்படுத்தும். நன்றி” எனப் பேசியுள்ளார்.
சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மாமன்னன் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினரும், மிஷ்கின், பா.ரஞ்சித், ஹெச்,வினோத், தயாரிப்பாளர் தாணு, கே.ராஜன், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, நடிகர் விஜயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் விழா நடைபெறும் அரங்குக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.