Mari Selvaraj: மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு.. ஷூட்டிங்கை தொடங்கி வைத்த உதயநிதி.. டைட்டில் இதுதான்!
மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கலையரசன், நிகிலா விமல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப்படத்தின் படப்பிடிப்பை நடிகரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என சொல்லலாம். தென் மாவட்டங்களில் இன்றளவும் தொடரும் சாதிய கொடுமைகளை வெளிப்படுத்திய பரியேறும் பெருமாளை, ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே கொண்டாடியது.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தையும் இயக்கியிருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவராகவும் மாறினார். கர்ணன் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டே எடுக்கப்பட்டது. இதனால் மாரி செல்வரஜின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை தற்போது அவர் இயக்கி முடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.விரைவில் மாமன்னன் படம் திரைக்கு வரவுள்ள நிலையில் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது!https://t.co/wupaoCQKa2 | #vazhai #mariselvaraj #directormariselvaraj #tamilcinema @mari_selvaraj pic.twitter.com/gpvAQdfLVQ
— ABP Nadu (@abpnadu) November 21, 2022
அதில் கலையரசன், நிகிலா விமல் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நான்கு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் நேவி ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு வாழை என பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் இன்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1994 ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு அமைய உள்ளதாக கூறப்படுகிறது.