கையில் 1 ரூவா 20 காசு வச்சிருந்தேன்; தற்கொலை பண்ணிக்கலாமான்னு நினைச்சேன் - மனோபாலா சொன்ன திடுக் ஃப்ளாஷ்பேக்..
இயக்குநர், குணச்சித்திர நடிகர் மனோபாலா. பென்சில் போன்ற அவரது தோற்றம். தெளிந்த நீரோடை போன்ற அவரது டயலாக் டெலிவரி. இரண்டும்தான் மனோபாலாவின் நடிப்பு ஸ்பெஷல்.
இயக்குநர், குணச்சித்திர நடிகர் மனோபாலா. பென்சில் போன்ற அவரது தோற்றம். தெளிந்த நீரோடை போன்ற அவரது டயலாக் டெலிவரி. இரண்டும்தான் மனோபாலாவின் நடிப்பு ஸ்பெஷல்.
ஒரு இயக்குநராக பிள்ளைநிலா, ஊர்க்காவலன், மல்லுவேட்டி மைனர் என 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். இயக்குநரும் நடிகருமான மனோபாலா தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற அவர் பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:
சவால் விட்டு ஜெயிச்சேன்:
யார் எனக்கு டைரக்ஷன் தெரியாது என்று சொன்னார்களோ அவர்கள் வாயாலேயே என்னை டைரக்டர் என்று கூப்பிட வைக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியமாக இருந்தது. அதேமாதிரியே பிள்ளைநிலா வந்தது. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் இயக்கும்படி வளர்ந்தேன். எல்லோரும் என்னைப் புகழ்ந்தனர். நான் எதிர்பார்த்த நாளும் வந்தது. என்னை யார் புறக்கணித்தாரோ அவர் என்னை டைரக்டரே என்று அழைத்தார். நான் ஒரு ஹோட்டலில் லிஃப்டில் இருந்து வெளியே வந்து காரிடாரில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது டைரக்டரே என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன் என்னை உதாசீனப்படுத்தியவர் நின்றார். நான் சுற்றும்முற்றும் பார்த்தேன். யாரை கூப்பிட்டீர்கள் சார் என்றேன். அவரோ என்ன டைரக்டரே உங்களைத் தான் என்றார். ஐயோ எனக்கு இயக்கம் எல்லாம் தெரியாது சார் என்றேன். அருகில் வந்து, என்ன டைரக்டரே இப்படிச் சொல்றீங்க. சினிமாவில் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் என்றார். நீங்கள் என் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணனும்னு கேட்டார். இல்லை சார். நான் உங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டேன். நான் அதே பழைய மனோபாலா தான். எனக்கு அந்த அளவுக்கு டைரக்ஷன் நாலெட்ஜ் இல்லை என்று சொல்லிவிட்டுச் சென்றேன். சினிமாவில் இதெல்லாம் நடக்கும்.
சினிமாவில் தோல்விகள் துரத்தும்:
சினிமாவில் சாதிக்க வரும்போது தோல்விகள் துரத்தும். நாளை காலை நீ உயிரோடு இருக்கக்கூடாது என்று சொல்லி தோல்விகள் துரத்தும். அதையும் தாண்டி தான் சினிமாவில் சாதிக்க வேண்டும். தற்கொலை முடிவுக்கு சினிமா துறை தள்ளும். என்னையெல்லாம் பாரதிராஜா கிட்ட வேலை பார்த்தால் நீ பெரிய இயக்குநரா என்றார்கள். அதேபோல் நடிக்க வந்தால் உன் மூஞ்சியை கண்ணாடியில் பார்த்திருக்கியா என்பார்கள். கடினமான காலத்தில் கண்ணதாசனின் காலமகள் கண் திறப்பாள் என்ற பாடல் எனக்கு நம்பிக்கை கொடுத்தது.
கடவுள் நம்பிக்கை அதிகம்:
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அதுவும் திருச்சி வெக்காளியம்மன் மீது நம்பிக்கை அதிகம். ஒருமுறை கையில் காசே இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வேறு. இங்கிருந்து புறப்பட்டு பஸ்சில் திருச்சி சென்றேன். வெக்காளியம்மன் கோயிலுக்குப் போனேன். ஒரு பேப்பரில் சொந்த அம்மாவுக்கு எப்படி எழுதுவுமோ அப்படி என் மனதில் இருந்ததை எழுதினேன். அதை சூலத்தில் கட்டிவிட்டு திரும்பினேன். அப்படிக் கட்டினால் 7 நாட்களுக்குள் வேண்டியது நடக்கும் என்பார்கள். நானும் அப்படிச்செய்துவிட்டு சென்னை வந்தேன். வந்து இறங்கியபோது கையில் 1.20 பைசா இருந்துச்சு. நேர ஒரு ஹோட்டலுக்குப் போனேன், ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை வாங்கினேன். அதில் நிறைய சாம்பார் ஊற்றி சாப்பிட்டேன். அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து டைரக்டரே என்றொரு குரல். கண்ணீர் மல்க நிமிர்ந்து பார்த்தேன். கலைமணி சார் நின்றிருந்தார். நீங்கள் தான் எனது அடுத்தபடமான பிள்ளைநிலா படத்தை இயக்குகிறீர்கள் என்று கூறிவிட்டு கையில் ரூ.50 அட்வான்ஸ் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த 50 ரூபாய் இன்னும் மாற்றாமல் வைத்திருக்கிறேன்.
இவ்வாறு மனோபாலா கூறியிருக்கிறார்.