Mani Ratnam: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் மணிரத்னம்!
பிரபல இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1983 ஆம் ஆண்டு கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மணிரத்னம் தொடர்ந்து தமிழில் 1985 ஆம் ஆண்டு மோகன் நடித்த இதயகோவில் படத்தில் முதன்முதலாக இயக்கியிருந்தார். தொடர்ந்து பகல் நிலவு, மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்,அலைபாயுதே, ஆய்த எழுத்து, குரு, ராவணன், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக மாறினார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து செக்க சிவந்த வானம் படத்தை இயக்கியிருந்தார்.
அதன்பின் தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பெரும் முயற்சி எடுக்கப்பட்டு நிறைவேறாமல் போன கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் களமிறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்த படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
Director #Maniratnam has been admitted in the hospital. Praying for speedy recovery ! #PS1
— Balu Muralidharan (@BaluMahe) July 19, 2022
கடந்த ஜூலை 8 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியிட்டு விழா பிரமாண்டமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் பேசிய மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க 3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் தொற்றில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்