Trisha: “பெண் உடலை வைத்து ஜெயித்த நடிகர்கள்.. திரிஷாவுக்கு குரல் கொடுக்க மாட்டார்கள்” - இயக்குநர் லெனின் பாரதி
இன்றைக்கு இருக்கும் அத்தனை முன்னணி நடிகர்களும் பெண் உடலை வைத்து தான் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளனர்.
பெண்களை உடலாக பார்க்க வேண்டும் என்று போதிக்கிற சினிமாவை எடுத்து வருகிறார்கள் என இயக்குநர் லெனின் பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “மங்கை”. இப்படத்தில் துஷி,சாம்ஸ், ஆதித்யா கதிர், ஷிவின் கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தீசன் இசையமைத்துள்ள மங்கை படத்தை ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே நேற்று மங்கை படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் லெனின் பாரதி கலந்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு இந்த படம் பற்றிய பெரிதாக விபரங்கள் தெரியாது. எக்ஸிக்யூடிவ் தயாரிப்பாளர் கார்த்திக் அழைத்தால் வந்தேன். ட்ரைலர் மற்றும் பாடல்களை தொடர்ந்து டைட்டில் டிசைனை பார்த்தேன். பொதுவாகவே ஆண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய டைட்டில்களை பார்த்தால் கம்பீரமாக இருக்கும். இன்னைக்கு நிறைய பேர் சொல்லும் ஆண்ட பரம்பரை என்பதற்கு ஏற்ப பெருமையாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் மங்கை என்ற டைட்டிலை பார்க்கும்போது அதில் கீறல்கள், சிதைவு உள்ளிட்டவை இருக்கின்றன. கீழே travel of woman என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
அது ஒரு மிகப்பெரிய அரசியல் எத்தனையோ ஒடுக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டுள்ள மக்களுக்காக நாம் குரல் கொடுத்துள்ளோம். அவர்களுடைய வளர்ச்சிக்கு நிறைய பங்களிப்பு செலுத்த நினைக்கிறோம். ஆனால் காலம் காலமாக எல்லா சமூகங்களிலும் சாதியங்களிலும் மதங்களிலும் ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். அதனால் மங்கு என்ற இந்த டைட்டில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ட்ரைலரை பார்க்கும்போது ஆணாதிக்க சமூகம் பெண்களை எப்படி துரத்துகிறது என்பது புரிகிறது. கயல் ஆனந்தி தேர்வு செய்யும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து ஆழமான கதைகளிலேயே நடித்து வருகிறார்.
நடிகர்கள் யாருமே நடிகை திரிஷாவின் விஷயத்தை பற்றி கேட்காமல் இருப்பதாக வெங்கட் பேசும்போது தெரிவித்தார். இப்படி கேட்பார்கள்? இன்றைக்கு இருக்கும் அத்தனை முன்னணி நடிகர்களும் பெண் உடலை வைத்து தான் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளனர். உச்ச நடிகர்கள் ஆகட்டும், நாட்டை ஆள துடிக்கிற நடிகர்கள் ஆகட்டும் அவர்களின் ஆரம்ப கால சினிமாவை எடுத்துக் கொண்டால் பெண் உடலை மையமாக வைத்து தான் பயணப்பட்டு வந்துள்ளார்கள். நான் சிறுவனாக இருக்கும்போது ரஜினி கமல் படங்களின் போஸ்டரில் சில்க் ஸ்மிதா படம் தான் பெரிதாக இருக்கும். அப்படி ஆணாதிக்க சமூகத்தில் இருக்கும் இந்த ஹீரோக்கள் இதனை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள்.
இவர்கள்தான் பெண்களை உடலாக பார்க்க வேண்டும் என்று போதிக்கிற சினிமாவை எடுத்து வருகிறார்கள். இப்படியான போக்கை கையாளும் நடிகர்கள் ஒருபோதும் பெண் விடுதலை பற்றி பேச மாட்டார்கள். ஏதாவது பேசினால் என்றால் அதற்கு பின்னால் ஒரு சுயநலம் இருக்கும். எனவே பெண்களை உடலாக பாவிக்காமல் சக மனிதராக பாவித்து படங்கள் எடுக்க வேண்டும் அதனை மங்கை படம் சொல்லிக் கொடுக்கும்” என லெனின் பாரதி கூறினார்.