Jigarthanda: 'கொலை கேஸ்ல மாட்டி விட்டுறாதீங்க' .. கார்த்திக் சுப்புராஜை அலறவிட்ட நிஜ ரவுடி.. ஜிகர்தண்டா ரிலீசாகி 9 வருஷமாச்சு..!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஹிட்டான ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமூக வலைதளத்தில் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘பீட்சா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, அம்பிகா, குரு சோமசுந்தரம், சௌந்தர ராஜா, வினோதினி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் ஆகியோர் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தனர்.
கேங்ஸ்டர் படங்கள் வரிசையில் தனக்கென தனியிடம் பிடித்த இப்படத்தில் “அசால்ட் சேது” கேரக்டரில் ரவுடியாக பாபி சிம்ஹா மிரட்டியிருந்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், ஜிகர்தண்டா படம் இன்றளவும் அனைவரின் பேவரைட் ஆகவும் உள்ளது. இப்படியான நிலையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் இடம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்திருந்தார்.
அதாவது, “ஜிகர்தண்டா பட ஷூட்டிங்கின் இடைவேளை காட்சி ஷூட் பண்ணோம். அந்தப் படத்தில் வில்லன் கூட்டத்தில் இருந்தவர்களில் சில ஆட்கள் நிஜத்திலும் கேங்க்ஸ்டர் தான். அப்படி அந்த காட்சி மதுரையில் ஒரு பெரிய அபார்ட்மெண்ட்ல ஷூட் பண்ணோம். மதுரைக்காரங்க பயங்கர பாசம் வந்துட்டா என்ன வேணும்னாலும் செய்வாங்க. அப்படி அந்தக் காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த அபார்ட்மெண்ட் அசோசியேஷன்ல இருந்து வந்து பயங்கர பிரச்சினை பண்ணாங்க. ஷூட்டிங் நடத்த முடியாது என சொன்னாங்க.
நான் போய் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கேன். அதுல ஒருத்தர் என்கிட்ட ரொம்ப திட்டி பேசிட்டு இருந்தார். அப்பதான் அந்த வில்லன் கூட்டம் ஆட்களும் சுத்தி நிக்குறாங்க. அதுல ஒருத்தர் நகர்ந்து நகர்ந்து என்னை திட்டிக்கிட்டு இருக்குற ஆளை பார்த்து வராரு. நான் அதனை கவனிச்சேன். ஏதோ தப்பா இருக்குதுன்னு தோணுச்சு. உடனே என் உதவி இயக்குநரை கூப்பிட்டு அவரை அழைத்துப் போக சொன்னேன். அவரும் வெளியே போய்ட்டார்.
பின்னர் அந்த நபர் கிட்ட ‘என்ன அண்ணே பண்ணீங்க?’ என கேட்டேன். அவர் உடனே, ‘அவர் உங்களை அப்படி மரியாதை இல்லாம பேசிட்டு இருக்கான். யார் அவன்?’ என டென்ஷனாக கேட்டார். அண்ணே என்னை கொலை கேஸ்ல மாட்டி விட்டுறாதீங்க என கையெடுத்து கும்பிட்டேன். இப்படி நிறைய மறக்க முடியாத சம்பவம் ஜிகர்தண்டா ஷூட்டிங்கில நடந்துச்சு” என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்