Karan Johar: மருமகள் என்பவர் பொழுதுபோக்கு கருவி இல்லை.. வம்பிழுத்த நெட்டிசனுக்கு கரண் ஜோகர் பதிலடி!
Karan Johar: தன் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு கரண் ஜோகர் என்றுமே தயக்கம் காட்டியது இல்லை.
கரண் ஜோகர்
பாலிவுட் இயக்குநர்களில் பரவலாக அறியப்படுபவர்களில் ஒருவர் கரண் ஜோகர். குச் குச் ஹோத்தா ஹே, கல் ஹோ நா ஹோ, மை நேம் இஸ் கான், ஏ தில் ஹே முஷ்கில் சமீபத்தில் வெளியான ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஷாருக் கானை வைத்து இவர் இயக்கிய பல படங்கள் கிளாசிக் படங்களாக கருதப்படுகின்றன. இயக்குநர் தவிர்த்து தர்மா ப்ரோடக்ஷன்ஸ் சார்பாக தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறார்.
சினிமா தவிர்த்து கரண் ஜோகர் பற்றி அதிகம் பேசப்படும் ஒரு தலைப்பு என்றால் அவரது பாலீர்ப்பு குறித்து. கரண் ஜோகர் தனது தேர்வுகளுக்காக கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். தன்னுடைய அடையாளத்தை அவர் வெளிப்பட்டையாக பேசுவதற்கு பல ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. தன் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு கரண் ஜோகர் தயக்கம் காட்டியது இல்லை. அதே வகையில் சமீபத்தில் நெட்டிசன் ஒருவரின் கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் கரண் ஜோகர் (Karan Johar).
மருமகள் என்பவர் பொழுபோக்கு கருவி அல்ல
கரண் ஜோகரின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றுக்கு நெட்டிசன் ஒருவர் “சீக்கிரம் உங்கள் அம்மாவுக்கு ஒரு மருமகளை கொண்டு வாங்க. அவங்களுக்கு டைம் பாஸ் ஆகிவிடும்” என்று கருத்து பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த கரண் ஜோகர் “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளுக்காகவும், நான் நானாக இருப்பதற்காகவும் பலர் என்னை கேலி செய்து வருகிறார்கள்.
இதில் குறிப்பாக இந்த மாதிரியான கருத்துக்கள் மிகவும் புண்படுத்தக்கூடியவை. ஒரு மருமகளின் வேலை யாரோ ஒருவரின் அம்மாவுக்கு டைம் பாஸ் செய்ய இருப்பது இல்லை. அவர் ஒரு தனிநபர். தன்னுடைய நேரத்தை தனிப்பட்ட ரீதியில் செலவிட அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.
மருமகள் என்கிற பட்டத்தின் மூலம் அவர்களுக்கு நிறைய சுமைகளை நாம் சுமத்துகிறோம். என்னுடைய அம்மாவும் என்னுடன் சேர்ந்து என் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார். அவருக்கு வேறு எந்த டைம் பாஸூம் தேவையில்லை. அவர் எங்கள் மீது செலுத்துகிறார். அதே அன்பை நாங்கள் அவருக்கு திருப்பிக் கொடுக்க முயற்சி செய்கிறோம்.
என் உறவில் அக்கறை கொண்டவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். என் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனக்கு ஒரு துணை தேவைப்பட்டால் எனக்குள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே நான் அவர்களை தேர்வு செய்வேனே தவிர வேறு யாரோ ஒருவருக்காக அல்ல” எனக் கூறியுள்ளார்.