HBD Balachander: உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்த கே.பாலசந்தர் பிறந்தநாள் இன்று..!
எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமான பாலசந்தரிடம் நாகேஷ் வாய்ப்பு கேட்டு சென்றார். அவரை மையமாக வைத்து கதை, திரைக்கதை எழுதிய படம் தான் “சர்வர் சுந்தரம்”.
தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என்றழைக்கப்படும் கே.பாலசந்தரின் பிறந்தநாள் இன்று...!
கே.பி. என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அளவுக்கு அவரது படங்களும் ரசிகர்களுக்கு மிக நெருக்கமாக அமைந்தது. தஞ்சாவூர், திருவாவூர் மாவட்டங்களின் பகுதியாக உள்ள நன்னிலத்தில் 1930 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி பிறந்த அவர் இளங்கலை பட்டம் பயின்று ஆட்சியராக பணி செய்வார் என கே.பி.யின் தந்தை கனவு கண்டார். ஆனால் முத்துப்பேட்டையில் ஆசிரியராக பணியாற்றிய அவர் பகுதி நேரமாக நாடகங்களை எழுதி இயக்கினார்.
கூட்டு குடும்ப சூழல், மத்திய வர்க்கத்தினரின் அவல நிலை, சமூகத்தில் பெண்களின் பங்கு என அவரின் நாடகங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமான பாலசந்தரிடம் நாகேஷ் வாய்ப்பு கேட்டு சென்றார். அவரை மையமாக வைத்து கதை, திரைக்கதை எழுதிய படம் தான் “சர்வர் சுந்தரம்”. ஆனால் இப்படத்தை இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினர்.
1965 ஆம் ஆண்டு தனது நாடகத்தில் மிகவும் வெற்றியடைந்த நீர்க்குமிழியை படமாக்கினார். அடுத்த சிவாஜியை வைத்து அவர் எடுத்த எதிரொலி படம் தோல்வியடைய பிரபலங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டு புதுமுகங்களை அறிமுகம் செய்ய தொடங்கினார். நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர் நீச்சல், வெள்ளி விழா, தாமரை நெஞ்சம் , காவியத்தலைவி, புன்னகை, நான் அவனில்லை, சிந்து பைரவி, வறுமையின் நிறம் சிவப்பு, ஜாதிமல்லி,அழகன், அச்சமுண்டு அச்சமுண்டு, தண்ணீர் தண்ணீர், அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு என அவரது படங்கள் இன்றைக்கும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
பாலசந்தருக்கு இருந்த நல்ல பழக்கங்களில் ஒன்று. தன் படங்களில் திறமைவாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு குறைவாக கொடுத்ததாக நினைத்தால் மீண்டும் அவர்களுக்கு அடுத்தடுத்து படங்களில் வாய்ப்பளிப்பார். அப்படித்தான் கமல், ரஜினி, ரமேஷ் அரவிந்த், யுவராணி என பலரும் அவரிடம் பட்டை தீட்டப்பட்டவர்கள். நாகேஷை வைத்து 36 படங்கள், கமலை வைத்து 27 படங்கள் என 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பாலசந்தர் காமெடி படங்களை இயக்குவதிலும் கைதேர்ந்தவர். பாமா விஜயம், பூவா தலையா, தில்லு முல்லு என அவரின் ஒவ்வொரு படமும் ஒரு கிளாஸிக் தான். அதிலும் ரஜினி உச்ச நட்சத்திரமாக இருந்த நேரத்தில் அவருக்கு மீசை இல்லாத கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கினார். தன் கதைக்கு என்ன தேவையோ அதை திரையில் கொண்டு வர வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பவர்.
தமிழ் மட்டுமல்லாது கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படம் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் கிட்டதட்ட 65க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார். தனது கவிதாலயா நிறுவனம் மூலம் படத் தயாரிப்பிலும் அவர் களம் கண்டார். தொடர்ந்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ரயில் சிநேகம், பின்னால் கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி ஆகிய சீரியல்கள் மூலம் சின்னத்திரையிலும் தனது கொடியை நிலை நாட்டினார். பாலசந்தர் படங்களில் பெண்களின் கதாபாத்திரங்கள் மிக வித்தியாசமாக பெண் அடிமைத் தனத்துக்கு எதிரானதாக இருக்கும். உதாரணமாக அனைவருக்கும் பிடித்த அவர் ஒரு தொடர்கதை “சுஜாதா” கேரக்டரை சொல்லலாம்.
கவிதை மாதிரி காட்சியமைப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். ரெட்டைச்சுழி, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடிகராகவும் கே பாலசந்தர் அசத்தியிருப்பார். அவர் தமிழ் சினிமாவின் சிகரம் மட்டுமல்ல இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாதவர்களில் ஒருவர். அவரது பாணியில் படம் இயக்க முயற்சிக்காதவர்களே இல்லை. அதுதான் கே.பி.யின் டச்...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்