"எல்லோரும் வலிமை அப்டேட் கேட்டப்போ, நான் தேன் கேட்டேன்.." வலிமை இயக்குநர் பிறந்தநாளில் ஒரு க்யூட் பதிவு..!
”கோடிக்கணக்கானோர் வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கையில், நான் வலிமை இயக்குநரிடம் தேன் கேட்டேன்.”
தமிழ் சினிமாவில் கத்துக்குட்டி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இரா.சரவணன். தற்போது ஜோதிகா மற்றும் சசி குமார் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. படத்தை ஜோதிகா மற்று சூர்யாவிற்கு சொந்தமான 2டி எண்டெர்னைட்மண்ட் தயாரிக்கிறது. இன்று வலிமை படத்தின் இயக்குநரான ஹெச். வினோத் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில், இரா. சரவணன் தனது சமூக வலைத்தள பக்கங்களில், ”வெற்றியும் புகழும் ஒரு மனிதனைத் துளியும் மாற்றாமல் இருக்கிறதென்றால், அவர் நிச்சயமாக H.வினோத். வலிமை மிகு இயக்குநருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என கூறி ஹெச்.வினோத் உடனான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், ’நேர்கொண்ட பார்வை' படம் முடித்து அடுத்தும் அஜீத் சார் படத்தை H.வினோத் இயக்க முடிவாகி இருந்த நேரம். மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றை என் அப்போதைய நிலை கருதி வழங்கினார் வினோத். அந்த வரத்தை அன்போடு தவிர்த்தேன். "நீயெல்லாம் பொழைக்கவோ திருந்தவோ வாய்ப்பே இல்லை" எனத் திட்டிவிட்டுப் போய்விட்டார். எனக்குப் பழக்கமானது இயக்குநர் வினோத்தாக இல்லை. பத்து வருடப் பழக்கத்தில் நண்பனாக, இயக்குநராக, அஜீத் பட இயக்குநராக வினோத் பயணிக்கும் உச்சம் மிகப்பெரியது, ஆனால், எப்போதுமே மாறாத அந்த எளிமை அப்படியே இருக்கிறது. தனித்த சிந்தனையில் வினோத் எப்பவுமே என்னை வியக்க வைப்பவர். ஒரு நாள் மெரினாவில் நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். "இடம் பெயரவோ எதையும் வெளிப்படுத்தவோ முடியாத ஒரு மரம்போல் மாறிடனும்னு தோணுது. ஒருத்தன் செதில் செதிலா வெட்டி வீசுறப்பகூட மரம் அப்படியே நிற்குது. ஆனா, நாம சின்னச் சின்ன விஷயத்துக்கே டென்ஷன் ஆகிடுறோம்" என வினோத் சொல்ல, நான் பேச்சற்று நின்றேன்.
அதே மெரினா... இன்னொரு நாள் இரவு, 'நேர்கொண்ட பார்வை ஷூட் முடிந்த நேரம். அப்போது வினோத் பழைய நோக்கியா போன் வைத்திருந்தார். அதை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தவன் எப்படியோ தொலைத்துவிட்டேன். பதறிப்போய்த் தேடினோம். மணல்வெளியில் கிடைக்கவில்லை. போன் செய்து பார்த்தால் அடுத்த கணமே ஸ்விட்ச் ஆஃப். அதுவரை பரபரப்பாக இருந்த வினோத் சட்டென சகஜமாகிவிட்டார், "ரொம்ப சாதாரண போன் அது. அதை எடுத்து ஒருத்தன் ஆஃப் பண்ணி வைச்சிருக்கான்னா, பாவம் ரொம்ப கஷ்டப்படுறவனாத்தான் இருப்பான் விடுங்க பார்த்துக்கலாம்" என்றபடி கிளம்பிவிட்டார்.சில வாரங்களுக்கு முன் சொந்த ஊருக்குச் செல்வதாகச் சொன்னார். அங்கு நல்ல தேன் கிடைக்கும் என முன்பே சொல்லி இருக்கிறார். அதனால், “ஒரு லிட்டர் புளியமரத்துத் தேன் கொண்டு வாங்க" என்றேன். கோடிக்கணக்கானோர் வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கையில், நான் வலிமை இயக்குநரிடம் தேன் கேட்டேன். இரண்டாவது நாளே தேனோடு வந்து, "டேஸ்ட் பண்ணிச் சொல்லுங்க" என்றார். கையில் ஊற்றிச் சுவைத்து, "தேன் மாதிரி இருக்குது" என்றேன். "இதான்யா நீ" என அவர் சிரித்த சிரிப்பு இருக்கிறதே...
நான்கு நாட்களுக்கு முன் ஒரு தகவலுக்காக போன் செய்தேன். ரஷ்யாவில் இருப்பதாகச் சொன்னார். தகவலைக்கூடச் சொல்லாமல் போனை வைத்துவிட்டேன். நேற்று சென்னை வந்துவிட்டதாகச் சொன்னார். ஆனாலும் அவரைச் சந்திக்கிற, பேசுகிற நேரத்தை முழுவதுமாகக் குறைத்து, ஓர் ஆகச்சிறந்த படைப்பாளனின் பணிக்கும் சுதந்திரத்துக்கும் என்னால் பங்கம் வராமல் பார்த்துக்கொள்கிறேன். வெற்றியும் புகழும் ஒரு மனிதனை துளியளவும் மாற்றாமல் இருப்பது அநியாய ஆச்சர்யம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா... இயற்கையைக் கொண்டாடுகிற /சுற்றுச்சூழல் மீது காதல் கொண்டிருக்கிற சமத்துவத்தைப் பேணுகிற / பெரிது கண்டு வியக்காத, சுகங்களில் லயிக்காத /எல்லோர் நலம் நாடுகிற நல்ல மனசு. பல்லாண்டு வாழ்க!” என குறிப்பிட்டுள்ளார்.