Director ganesh: என்னால அவன் ஸ்விக்கியில டெலிவரி வேலை பார்த்தான்.. உதவி இயக்குநருக்காக மேடையில் அழுத இயக்குநர்!
குருதி ஆட்டம் படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உதவி இயக்குநருக்காக மேடையில் கண்கலங்கினார்.
‘8 தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உதவி இயக்குநருக்காக மேடையில் கண்கலங்கினார்.
Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.
அதில் பேசிய இயக்குனர் ஶ்ரீகணேஷ் கூறும் போது “ இந்த படத்தின் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய பயணம் கிடைத்தது. தயாரிப்பாளர் என்னுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை உறுதுணையாக இருந்தார். எனது முதல் படம் முடித்தவுடன் அதர்வா என்னை நம்பி என்னுடன் படம் பண்ண ஒத்துகொண்டார். நான் கதை எழுத ஒரு வருடம் கிட்ட எடுத்துக்கொண்டேன். அதுவரை பொறுமையாக இருந்தார்.
ஒரு நாள் சென்று படத்தின் முதல் பாதியை சொன்னேன். முதல் பாதியை கேட்ட உடனேயே கட்டிப்பிடித்து பாராட்டினார். எனது நம்பிக்கையை காப்பாற்றி விட்டாய் என்றார். வேலை ஆரம்பமானது. இராண்டாம் பாதியை ஒரு நாள் சொன்னேன். அவர் அப்போது ஒரு மாற்றத்தை செய்ய சொன்னார். அதன் படி, நான் கதையின் இறுதியில் சில மாற்றங்களை செய்தேன்.
என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குருதி ஆட்டம் காப்பாற்றும். இந்த திரைப்படம் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அறிமுக திரைப்படம், அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் நடிகர்கள் பலருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
தொடர்ந்து தனது உதவி இயக்குநர்களை மேடையேற்றிய ஸ்ரீகணேஷ்.. இந்தப்படம் ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகி சில பிரச்னைகளால் தடைபட்டு நின்றது. அதனால் இடையில் என்னிடம் வேலை பார்த்து கொண்டிருந்த உதவி இயக்குநர்களிடம் வேறு எங்காவது சென்று வேலை பாருங்கள் என்றேன். என்னுடைய அசிஸ்டெண்ட் குருவை ஒரு நாள் எதிர்பாரதவிதமாக பார்க்க நேர்ந்தது. அப்போது அவன் ஸ்விக்கியில் டெலிவரி பாயாக பைக் ஓட்டிக்கொண்டிருந்தார். என்னிடம் எப்போது படம் தொடங்குகிறீர்கள் என்று சொல்லுங்கள் நான் வந்து விடுகிறேன் என்று சொன்னான்” என்று கணேஷ் சொல்லும் போது அழுது விட்டார். தொடர்ந்து பேசிய அவர், “ இது ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். இந்த படம் ஆகஸ்டு 5 வெளிவருகிறது, படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்று பேசினார்.