Modern Love Chennai: ‘4 முறை காதலித்துள்ளேன்.. மறக்கவே முடியாது’ - பட நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியாக பேசிய பாரதிராஜா..!
காதல் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என மாடர்ன் லவ் சென்னை (Modern Love Chennai) பட நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
காதல் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என மாடர்ன் லவ் சென்னை (Modern Love Chennai) பட நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
பாவக்கதைகள், புத்தம் புது காலை, சில்லுக்கருப்பட்டி ஆகிய ஆந்தாலஜி பட வரிசையில் புதிதாக மாடர்ன் லவ் சென்னை (Modern Love Chennai) என்ற ஆந்தாலஜி படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரிது வர்மா, அசோக் செல்வன், ரம்யா நம்பீசன், வாமிகா, ஸ்ரீ கௌரி பிரியா, சம்யுக்தா விஸ்வநாதன், டி.ஜே.பானு, சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், வாசுதேவன் முரளி, வசுந்தரா, கிஷோர், விஜயலட்சுமி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இயக்குநர்கள் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்ஷய் சுந்தர், தியாகராஜன் குமாரராஜா என 6 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். மேலும் இசையமைப்பாளர்களாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார், ஷான் ரோல்டன் ஆகியோர் இந்த கதையில் பணியாற்றியுள்ளனர்.
Modern Love Chennai ஆந்தாலஜி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, “எனக்கு ஆந்தாலஜி படம் புது அனுபவமாக இருந்தது. பொதுவாக நான் ஒரு பாரம்பரியமானவன். பாரம்பரியாக செல்வதை உடைத்து படம் பண்ணுவது என்பது ஒரு கலை என சொல்வேன். இந்த படம் வழக்கமான கதையில் இருந்து இது மாறுபட்டு இருக்கிறது.
தியாகராஜன் குமாரராஜாவே வித்தியாசமான மனுசன். கமர்ஷியலா சினிமா எடுத்தோம் ஆரவாரம் செய்தோம் என்றில்லாமல் அழகாக ஒரு காதல் கதை சொல்லலாம் என்பதை குமாரராஜாவிடம் கற்றுக் கொண்டேன்.
என்னை காதல் காட்சிகளின் மன்னன் என சொல்வார்கள். காதல் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. நான் காதல் செய்யவில்லை என்றால் கலைஞன் ஆகிருக்க முடியாது. அது ஒரு மென்மையான விஷயம். எனக்கு வயதே ஆகாது. அப்படி நினைத்தால் என் சகாப்தம் முடிந்தது என்று அர்த்தம். நமது பலவீனங்கள் என்றைக்கும் தெரியக் கூறாது. 84 வயதானாலும் காதல் செய்வேன்.
நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு காதல் செய்தேன். சென்னை வந்த பிறகு காதல் செய்தேன். கால மாற்றத்தால் இதுவரை 4 முறை காதல் செய்து விட்டேன். எந்த குடையும் (காதல்) நிழல் தரும். எனக்கு நிழல் தந்த அந்த 4 குடைகளை நான் மறக்கவும் முடியாது. அது ஒரு பெரிய இலக்கியம்.
என்னை பொறுத்தவரை காதல் என்பது முக்கியமான விஷயம். இந்த படத்தில் நடித்துள்ளதைப் பார்க்கும்போது தமிழில் ஆட்கள் இவ்வளவு கிடைப்பது கஷ்டம். நாம் மேலே முன்னேறி வந்துவிட்டோம். இயக்குநர் தியாகராஜா குமாராஜா எனக்கு நல்ல நண்பனாக கிடைத்தான். இது நிச்சயம் உங்களை இன்னொரு உயரத்திற்கு கொண்டு செல்லும் காதல் படமாக இது இருக்கும்.
காலகட்டத்தில் மாற்றம் என்பது இருக்கும். அதற்கேற்ப நாமும் ஓட வேண்டும். இளையராஜா பொதுவாக அன்னக்கிளி படத்தில் இருந்து பல படங்களுக்கு இசை பண்ணிருக்காரு. ஆனால் மற்ற படங்களை விட இதில் சிறப்பா இசை பண்ணிருக்காரு. எனக்கு ராஜூ முருகன் படங்களை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது.