Vanangaan: சூர்யாவை மிஞ்சிய அருண்விஜய்.. மீண்டும் தொடங்கிய வணங்கான் படப்பிடிப்பு.. வைரலாகும் போட்டோ..!
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட வணங்கான் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட வணங்கான் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் பாலா. விக்ரம் நடித்த சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலா தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, பிசாசு, தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு விக்ரம் மகன் துருவை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு திருப்தி அளிக்காததால் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் ஆனது.
பாலாவின் படம் தியேட்டரில் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்தாண்டு பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா மீண்டும் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு வணங்கான் என பெயரிடப்பட்டது.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கும் பாலாக்கும் இடையே மோதல் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து வந்த சர்ச்சைகளுக்கு நடிகர் சூர்யா முற்றுப்புள்ளி வைத்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக இயக்குநர் பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணங்கான் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்கள் சூர்யாவுக்கு பொருத்தமாக இல்லாதது போல தோன்றுவதால் அவர் விலகிக் கொள்வதாக இருவரும் பேசி ஒரு மனதாக முடிவு எடுத்தோம்” என தெரிவித்திருந்தார். இது மிகவும் வருத்தமான செயல் தான் என்றாலும், சூர்யாவின் நலன் கருதி எடுத்த முடிவு. எனவே வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் என பாலா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார் இதேபோல 2டி நிறுவனமும் சூர்யா விலகுவதை உறுதி செய்து பாலாவின் முடிவுக்கு உடன்படுவதாக தெரிவித்தது.
இதனிடையே கடந்த சில நாட்களாக வணங்கான் படத்தை மீண்டும் வாழ தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் நடிப்பார் என்றும், ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்ட கீர்த்தி ஷெட்டி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கி விட்டதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது இதில் அருண் விஜய் கெட்ட வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனைப் பார்த்து ரசிகர்கள் சூர்யாவை விட இந்த கெட்டப் அருண் விஜய்க்கு பொருத்தமாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.