Ameer: சீதை மாதிரி என்னை நிரூபிக்க வேண்டியுள்ளது.. ஜாஃபர் சாதிக் பிரச்சினையில் அமீர் வேதனை!
ஜாஃபர் சாதிக்கை பொதுவெளியில் என் தம்பி என்று சொன்னேன். அவர் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். நான் எதையாவது மறுக்க முடியுமா? - நான் பார்க்கவே இல்லை என சொல்லவில்லை.
நாங்கள் சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் அல்ல என இயக்குநர் அமீர் உயிர் தமிழுக்கு பட விழாவில் பேசியுள்ளார்.
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் “உயிர் தமிழுக்கு”. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்பிரமணிய சிவா, மகாநதி ஷங்கர், சரவண சக்தி என பலரும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இப்படத்துக்கு இசையமைக்க மே 10 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. உயிர் தமிழுக்கு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.
இதில் பேசிய அமீர், “என்னுடைய திரைத்துறை அனுபவம் தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து, அரசியல் பேசிய காலக்கட்டத்தில் இருந்து நான் சந்தித்திடாத புதிய மேடையாக இது உள்ளது. படம் பற்றி பேசுவதா அல்லது நடக்கும் பிரச்சினை பற்றி பேசுவதா என குழப்பம் தான் எழுகிறது. நான் யார் என என்னைப்பற்றி யோசித்தால் ராமாயணத்தில் வருகிற சீதையும், நானும் உடன் பிறந்தவர்கள் போல. அவர் அக்கினியில் மிதந்து தன் கற்பை நிரூபித்தார். அவராவது ஒருமுறை நிரூபித்தார். நான் வாரா வாரம் நிரூபித்து கொண்டிருக்கிறேன்.
ஜாஃபர் சாதிக் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் படம் இன்னும் 10 நாட்கள் ஷூட்டிங் மீதமிருக்கும் நிலையில் ஒரு புது பிரச்சினை தொடங்கியது. எனக்கு என்ன நடக்குது எதுவுமே புரியல, அதனால் அறிக்கை மூலம் பதிலளிக்கலாம் என கரு.பழனியப்பனிடம் சொன்னேன். 10 நாட்களில் முதல் நாள் ஷூட்டிங் நடந்துச்சு. இரண்டாம் நாள் இரவில் இருந்து பிரச்சினை தொடங்கியது. இவர் இப்பிரச்சினை 4 நாட்களில் சரியாகும் என சொன்னார். ஆனால் எனக்கு சரியாக வரும் என தோன்றவில்லை என கூறினேன். பிரச்சினை அதிகரிக்க அதிகரிக்க நான் அறிக்கை கொடுத்தேன்.
அதற்கு எதிர்கருத்து வந்தது. யார் என பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளில் நான் பேசிய அரசியல் கருத்துகளை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் தான் பிரச்சினை பற்றி புதிய புதிய தகவல்களை தெரிவித்தனர். நான் தலைமறைவு என சொன்னவுடன் வீடியோ வெளியிட்டேன். அதில் பிரச்சினை செய்தார்கள். இப்படி என்னை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள்.
ஜாஃபர் சாதிக்கை பொதுவெளியில் என் தம்பி சொன்னேன். அவர் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். நான் எதையாவது மறுக்க முடியுமா? - நான் பார்க்கவே இல்லை என சொல்லவில்லை. அவரை எனக்கு 10 ஆண்டுகளாக தெரியும். ஜாஃபர் சாதிக்கிற்கும் எனக்கும் தொடர்பு இருக்கு. ஆனால் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. சந்தேக நிழல் விழலாம். ஆனால் நீங்களே முடிவு செய்தால் எப்படி என்று தான் புரியவில்லை.
நாங்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் அல்ல. சினிமாவின் மீது ஏற்பட்ட விருப்பத்தால் வீட்டில் காசு வாங்காமல் சுயமரியாதையோடு வந்தவர்கள். இன்னொருத்தர் விஷயத்தை தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. பணம் சம்பாதிக்க நான் வரவில்லை. என்னுடைய கடைசி காலம் வரை விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ நினைக்கிறேன்” என அமீர் தெரிவித்துள்ளார்.