(Source: ECI/ABP News/ABP Majha)
Ameer: “வேற வழியில்லாம கட்சியில வச்சிருக்காங்க” - பிரதமர் மோடியை விமர்சித்த இயக்குநர் அமீர்!
இந்தியாவின் அனைத்து இந்து மக்களையும் ஒருங்கிணைத்து சுபிட்ஷம் பெறுவதற்காக கட்டப்பட்டது ராமர் கோயில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
அரசியல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஸ்தலம் தான் அயோத்தி ராமர் கோயில் என இயக்குநர் அமீர் நேர்காணல் ஒன்றில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் பேசிய அவர், “பாசிசத்தின் கடைசி ஆயுதம் திரைத்துறை தான். மக்களை மதம், கடவுள் பெயரால் பிரித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள். மேலும் இந்திய இறையாண்மையின் 4 தூண்களையும் கைப்பற்றி விட்டார்கள். மீதமிருக்கும் ஒன்று திரைத்துறை மட்டும் தான். அதிலும் ஆதிபுருஷ், காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதை மாற்ற நினைக்கிறார்கள். வடநாட்டில் அது செல்லுபடியாகும். தமிழ்நாட்டில் ஆனால் அது நடக்காது. தென்னிந்தியாவில் உள்ள மக்கள் பாஜகவின் அரசியல் சூழ்ச்சியை புரிந்தவர்களாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
அதனால் தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், கர்நாடகாவில் பர்தா அணியும் விஷயத்தை பெரிதாக்கி கலவரமாக முயன்று தோற்று போனார்கள். ஆன்மீகம், மதம் என்ற பெயரில் பாஜக நடத்தும் அரசியல் இங்கு எடுபடாது. தென்னிந்திய மாநிலங்களுக்கு தாய்நாடு தமிழ்நாடு தான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது, பெரியார் கொள்கையை அழிக்க நினைப்பது நடக்காது. இவை அந்தந்த நேரத்தில் விவாதம், கருத்து வேறுபாடுகளை உருவாக்குமே தவிர வெற்றியை தராது என்பது என்னுடைய எண்ணமாக உள்ளது.
தொடர்ந்து அயோத்தி கோயிலை மோடி திறந்தது பற்றி பேசிய அமீர், ‘இந்திய ஆன்மீகவாதிகளுக்கு பிரதமர் மோடி யார் என்பது தெரியும். பாஜகவில் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நபராகத் தான் மோடி உள்ளார் என்பது உண்மை. ஏனென்றால் அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். வேறு வழியில்லாமல் தான் கட்சிக்குள் இவ்வளவு பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர் பெயரை சொல்லித்தான் ஓட்டுகளை ஒருங்கிணைத்துள்ளோம் என்பது அக்கட்சியில் உள்ளவர்களுக்கு தெரியும். அதனால் மோடியை வைத்துள்ளார்கள்.
அவருடைய செயல், அன்பு, பிறப்பு காரணமாக கட்சிக்குள் வைக்கவில்லை என்பது மோடிக்கும் தெரியும். ஆன்மீகத்தை நோக்கி, இந்தியாவின் அனைத்து இந்து மக்களையும் ஒருங்கிணைத்து சுபிட்ஷம் பெறுவதற்காக கட்டப்பட்ட கோயில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அரசியல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஸ்தலம் தான் அது. அந்த ராமர் கோயிலுக்கு நம்பிக்கையுடன் செல்பவர்களை நாம் ஒன்னும் சொல்ல முடியாது.
நீங்கள் நன்றாக அந்த கோயிலை உருவாக்க எடுத்துக் கொண்ட காலங்களை பாருங்கள். அங்கு கோயில் இருந்தது என சொல்லி 20 ஆண்டுகள், அதனை இடிச்சிட்டு 20 ஆண்டுகள், அதை கட்டப்போறோம்ன்னு சொல்லி 10 ஆண்டுகால அரசியல், கட்டிட்டோம் என சொல்லி இன்னுமொரு 10 ஆண்டுகள் என அதனை சுற்றி 60 ஆண்டுகால அரசியல் இருக்கு. பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் கோயில் இருந்தது என சொன்னவர்கள், இன்றைக்கு ஏன் அந்த இடத்தில் இருந்து 3 கி.மீ., தள்ளி ஏன் ராமர் கோயிலை கட்ட வேண்டும். அதுதான் அரசியல்” என தெரிவித்துள்ளார்.