Director Ameer: இந்திய ரசிகர்களின் ”ஜெய் ஸ்ரீராம்” கோஷம்.. படித்த சமூகம் மடைமாற்றப்பட்டதாக அமீர் கடும் கண்டனம்..!
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானுக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் கோஷமிட்ட சம்பவத்திற்கு இயக்குநரும், நடிகருமான அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானுக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் கோஷமிட்ட சம்பவத்திற்கு இயக்குநரும், நடிகருமான அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி குஜராத்தில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 192 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ரன் குவிப்பால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள இந்திய மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.
அதேசமயத்தில் போட்டி நடைபெற்ற மைதானத்தில் சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்றது. பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக இந்திய ரசிகர்கள் ’ஜெய் ஸ்ரீ ராம்’ ’ஜெய் ஸ்ரீ ராம்’ என குரல் எழுப்பினர். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி கடும் எதிர்ப்பலைகளை பெற்றது. போட்டி நடைபெறும் போது ”ஜெய் ஸ்ரீராம்” என முழங்கும் பாடல்களும் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது. இப்படி குறிப்பிட்ட ஒரு மதத்தை பசைசாற்றும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில் ரிஸ்வானுக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் கோஷமிட்ட சம்பவத்திற்கு இயக்குநரும், நடிகருமான அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், “இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது இந்திய அணி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். இதனை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “கடந்த 10 ஆண்டுகளில் படித்த சமூகத்தை என்ன மாதிரி மடைமாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடு தான் அந்த கோஷம். படிக்காத பாமர மக்களோ, கடைநிலை ஊழியர்களோ அங்கே போய் மைதானத்தில் இருக்கவில்லை. அங்கு இருப்பவர்கள் எல்லாம் மேல்தட்டு மக்கள். அவர்களின் மூளைக்குள் என்ன சொருகப்பட்டிருக்கிறது என்பது தான் அந்த சம்பவத்தின் வெளிப்பாடு” என அமீர் பதிலளித்தார்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ரசிகர்களின் இத்தகைய செயலை கண்டித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “விளையாட்டை விளையாட்டாகவே பார்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். உங்களுக்கு தெரியாததது ஒன்றும் இல்லை. இந்திய கிரிக்கெட் என்பது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது அல்ல. அது ஒரு கிரிக்கெட் வாரியம் அவ்வளவு தான். அதேதான் பாகிஸ்தான் அணிக்கும் பொருந்தும். வீரர்களை நாடு உருவாக்கவில்லை. ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. முழுக்க முழுக்க வணிகமான ஒன்றில் போய் உங்கள் தேசப்பற்றை காட்டுவீர்கள் என்றால் உங்கள் அறியாமையை எண்ணி நான் வருத்தப்படுகிறேன். பெரிய வர்த்தகத்தில் அரசு தலையீட்டு தான் ஆக வேண்டும். ஆனால் இதன் மூலம் தேசப்பற்றை உணர்த்துவதன் பின்னணியை மக்கள் உணர வேண்டும்” என அமீர் கூறினார்.
மேலும் படிக்க: Minister Udhayanidhi Stalin : ’இந்திய ரசிகர்கள் இப்படி செய்ததை ஏற்க முடியாது’.. கண்டனம் தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்