மூளை அதிகமா இருக்கவன் அப்டிதான் பேசுவான்...மிஷ்கினை ஆதரித்து பேசிய சமுத்திரகனி
இயக்குநர் மிஷ்கின் பேசியதை தான் தவறாக பார்க்கவில்லை என்றும் மிஸ்கின் சார்பாக தானும் அனைவரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதாக நடிகர் இயக்குநர் சமுத்திரகனி தெரிவித்துள்ளார்

மிஷ்கின் சர்ச்சை பேச்சு
பாட்டில் ராதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இயக்குநர் மிஷ்கினின் பேச்சு பரவலாக எதிர்ப்பை பெற்றது. ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியது , போதை பழக்கத்தை மிகைப்படுத்தியது , பெண்களைப் பற்றி அவதூறாக பேசியது என மிஸ்கின் பேசிய பல கருத்துக்கள் விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவை மிஸ்கின் ஒருமையில் குறிப்பிட்டு பேசியதை நடிகர் அருள்தாஸ் கடுமையாக விமர்சித்தார். நடிகர் மிஸ்கின் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்திருந்தார்கள்.
மன்னிப்புக் கேட்ட மிஷ்கின்
தொடர் கண்டனங்களைத் தொடர்ந்து பேட் கெர்ல் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் பகிரங்க மன்னிப்புக் கேட்டார் . மிஷ்கின் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பலர் குரலெழுப்பினார்கள். அந்த வகையில் திரு மாணிக்கம் படத்தின் பத்திர்கையாளர் சந்திப்பில் மிஷ்கினுக்கு ஆதரவாக நடிகர் சமுத்திரகனி பேசியுள்ளார்.
மிஷ்கின் பேசியதில் தவறில்லை
மிஸ்கின் பேசியது பற்றி சமுத்திரகனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் 'அதான் மிஷ்கின் அனைவரது முன் மன்னிப்பு கேட்டுவிட்டாரே. பிறகு என்ன பிரச்சனை. மிஷ்கின் ஒரு மாதிரி எமொஷனலான நபர். என்னை பார்த்தாலே என் பெயரை சொல்லி ரெண்டு கெட்டை வார்த்தை சொல்லி பின் ரெண்டு அடி அடிப்பான் . அவன் வேற ஒரு எக்ஸ்ட்ரீம் . அவன் தனது அன்பின் உச்சத்தில் சில விஷயங்களை வெளிப்படுகிறான். அவனை நான் அப்படிதான் பார்த்தேன். வேறு எப்படியும் பார்க்கவில்லை. அந்த நிகழ்விற்கு பின் வெற்றிமாறன் மிஷ்கினிடம் ஃபோன் போட்டு பேசியது எனக்குதான் தெரியும் அதே போல் அமீர் கான்ஃபரன்ஸ் கால் போட்டு என்ன பேசினார் என்று எனக்கு தெரியும். இது ஒரு மனிதனின் அன்பின் வெளிப்பாடு. ஊர் பக்கம் போனால் ஒரு கெட்டவார்த்தை தான் அன்பான சொல்லு. அதை நீங்கள் எல்லாரும் தவறாக தான் பார்ப்பீர்கள். எங்களுக்குள் நாங்கள் அப்படிதான் பேசிப்போம். மிஷ்கினை பொறுத்தவரை அவனது அன்பு கொஞ்சம் அதிகமாக இருக்கு என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏன் நாம் யாரும் அந்த மாதிரி வார்த்தைகள் பேச மாட்டோமா. மூளை கொஞ்சம் அதிகமாக இருக்கவன் பேசினால் என்ன செய்வீங்க. அப்டிதான் இருக்கும். அன்பின் வெளிப்பாடு அது. அதை தவறு என்று நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவரைப் பற்றி புரிந்தவர்களுக்கு தெரியும் அவர் யார் என்று. புரியாதவர்களுக்கு தான் இந்த மன்னிப்பு. அவருக்காக நானும் சேர்ந்து கூட உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். " என சமுத்திரகனி தெரிவித்துள்ளார்

