முகபாவம்... அழுத்தமான வசன உச்சரிப்பு... பாலிவுட் பிதாமகன் திலீப்குமார்!
“சோக மன்னன் “என்ற பட்டம் பெற்ற அவர், இன்று பலரை சோகத்தில் ஆழ்த்தி சென்றுவிட்டார்.
இந்தி திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் பிதாமகனாக வலம் வந்தவர் தான் நடிகர் திலீப்குமார். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய முகபாவங்கள், அழுத்தமான வசன உச்சரிப்பால் ரசிகர்களின் மனதினைக்கொள்ளையடித்தவர்.
இந்தியாவில் பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானில் 1922 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் திலீப்குமாரின் இயற்பெயர் யூசப் கான். இவரது தந்தை லாலா குலாம் சார்வார் பழவியாபாரியாக இருந்து வந்தார். இவரது குடும்பம் மும்மைக்கு குடிபெயர்ந்த பொழுது புனேவில் கேன்டீனில் பணிபுரிந்து வந்தார் யூசப் கான் . அப்பொழுது தான் 1943 ஆம் ஆண்டு பாம்பே டாக்கீஸ் நிறுவனர் ஹிமான்ஷு ராயின் மனைவி தேவிகா ராணியின் உதவியோடு பாலிவுட்டில் கால் பதிக்கத் தொடங்கினார். முதன் முதலாக 1944 ஆம் ஆண்டு ஜ்வார் பாட்டா படம் மூலம் பாலிவுட்டில் நடிக்கத்தொடங்கினார் யூசப் கான் எனப்படும் திலீப்குமார். அடுத்ததாக 1947 ஆம் ஆண்டு ஜூக்னு படத்தில் நடத்தார். பின்னர் 1949 ஆம் ஆண்டு அவர் ராஜ் கபூருடன் இணைந்து காதல் இசை நாடகமான அண்டாஸ் மற்றும் 1955ல் தேவ் ஆனந்த் உடன் இன்சநியாட் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பின்னர் இவர் புகழ்பெற்ற புகழ்பெற்ற மதுமதி, மொகலே ஆசாம், ராம் அவுட்டர் ஷியாம், தேவதாஸ், அமர் உள்ளிட்ட படங்களில் 1951 முதல் 1958 காலகட்டங்களில் நடத்திருந்தார். காதபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து திறமையினை வெளிப்படுத்திய இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதோடு மட்டுமின்றி இப்படங்களின் மூலம் இவருக்கு “சோக மன்னன் “என்ற பட்டத்தினையும் மக்கள் வழங்கினர்.
இதோடு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அழுத்தமான வசன உச்சரிப்பு, முகபாவங்களால் ரசிகர்களின் மனதினைக்கொள்ளை கொண்ட திலீப்குமார். மிருதுவான மனம்படைத்தப் பாத்திரங்களிலும், நகைச்சுவைப் பாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் சரித்திரத் திரைப்படமான முகல் ஏ ஆஜாம் திரைப்படத்தில் , ஜஹாங்கீர் அக்பரின் மைந்தனான நடித்த படம், மிகப்பெரிய வசூலினை அள்ளிக்கொடுத்தது. நடிப்பு மட்டும் அல்லாமல் படத்தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார். கங்கா ஜமுனா என்ற வெற்றி படத்தினை தயாரித்து இயக்கி இருந்தார் திலீப்குமார். திரையுலகிற்கு வந்த 50 ஆண்டுகளில் 65க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருடைய நடிப்புத்திறனை பாராட்டும் வகையில், சினிமாத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதுகளை அவர் பெற்றார். குறிப்பாக மிகச்சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினை எட்டுமுறை பெற்றதோடு, 1992ல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்று கவுரவிக்கப்பட்டார். 1994ல் இந்திய அரசாங்கம் அவருக்குத் தாதா சாஹேப் பால்கே விருது அளித்து கவுரவித்தது . மேலும் 1997ல் திலீப்குமாருக்கு பாகிஸ்தானின் உயரிய சிவிலியன் விருதான, நிஷான்-ஏ-பாகிஸ்தான் என்ற விருது வழங்கப்பெற்றது. இதோடு என்.டி. ஆர் தேசிய விருதினை பெற்ற பெருமைக்குரியவராக விளங்கி வந்தார்.
பாலிவுட் லெஜெண்ட் என அழைக்கப்படும் திலீப் குமார் நடிகர் மற்றும் படத்தாயாரிப்பாளர் மட்டுமின்றி அரசியல் வாழ்க்கையிலும் களம் கண்டுள்ளார். இவர் கடந்த 2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்திருந்தார். நடிகர், படத்தயாரிப்பாளர், அரசியல் பிரவேசம் என அனைத்திலும் தன்னுடைய திறமையினை மிகச்சிறப்பாக மேற்கொண்ட இவர் தற்போதுள்ள பாலிவுட் நடிகர்களுக்கு பிதாமகனாகவும் விளங்கி வருகிறார். பல்வேறு திறமைகளை தன்னிடம் கொண்டிருந்த இவர் முதுமையின் காரணமாக தன்னுடைய 98 வயதில் உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் காதல் என்ற ஒன்று இருக்கும் வரை தேவதாஸினை யாரும் மறக்க மாட்டோம், அதேப்போன்று மன்னர்களின் வரலாறுகளை நினைவுக்கூரும் பொழுது எல்லாம் ரசிகர்களின் மனதிற்கு நிச்சயம் நடிகர் திலீப் குமார் வந்து செல்வார்…..