Rajinikanth: அடேங்கப்பா.. இதுவரை சுதந்திர தினத்தில் வெளியான ரஜினி படங்கள் என்னென்ன தெரியுமா?
நாடு முழுவதும் 77வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சினிமா கேரியரில் இதே நாளில் வெளியான படங்கள் பற்றி காணலாம்.
நாடு முழுவதும் 77வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சினிமா கேரியரில் இதே நாளில் வெளியான படங்கள் பற்றி காணலாம்.
முள்ளும் மலரும்
1978 ஆம் ஆண்டு யதார்த்த இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான முள்ளும் மலரும் படம் ரஜினியின் நடிப்புக்கு மிகச்சிறந்த சான்றாக உள்ளது. உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலின் கதையை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த், சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ஜானி
முள்ளும் மலரும் படத்தின் வெற்றிக்குப் பின் மீண்டும் இயக்குநர் மகேந்திரனுடன் ரஜினி இணைந்த படம் ‘ஜானி’. ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரட்டையர்களில் ஒருவர் திருடன், இன்னொருவர் சவரத் தொழிலாளி என ரஜினி நடிப்பில் மாஸ் காட்டியிருப்பார். திரைக்கதையில் செய்த மேஜிக் தமிழ்சினிமாவின் மாற்று சினிமா என ஜானி படத்தை கொண்டாட வைத்தது. இளையராஜா இசையமைத்த இப்படத்தில் ஸ்ரீதேவி, தீபா, தயாரிப்பாளர் பாலாஜி என பலரும் நடித்திருந்தார்கள்.
நெற்றிக்கண்
1981 ஆம் ஆண்டு கமர்ஷியல் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘நெற்றிக்கண்’. ஆக்ஷன் ஹீரோவாக, நடிப்பின் மன்னனாக ரஜினியை பார்த்த ரசிகர்கள் இதில் பிளேபாய் ரஜினியை பார்த்தார்கள். அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் அவர் நடித்திருந்தார். இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பில் வெளியான முதல் படம் இதுவாகும். லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, சரத் பாபு, தேங்காய் சீனிவாசன் என பலரும் நடிக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். நெற்றிக்கண் படத்திற்கு கதை – வசனம் விசு எழுதினார். சக்ரவர்த்தியின் (அப்பா ரஜினி) ஸ்டைலான குறும்புகளுக்காக இப்படத்தை நாம் பார்க்கலாம்.
பாபா
அண்ணாமலை, பாட்ஷா, வீரா என ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு பாபா படம் வெளியானது. இப்படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். பாபா படத்தில் மனிஷா கொய்ராலா, நம்பியார், சுஜாதா, சங்கவி, விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ், டெல்லி கணேஷ், ரியாஸ்கான், ஆஷிஷ் வித்யார்த்தி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆனால் இப்படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது.
ஜெயிலர்
நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. சுதந்திர தின விடுமுறையை குறிவைத்தே இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் கிட்டதட்ட ரூ.350 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.