Fact Check : ”இந்தியாவில் சத்குருவைச் சந்தித்தாரா வில் ஸ்மித்?” - பொய் தகவல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி!
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், சத்குரு ஜக்கி வாசுதேவைச் சந்திக்க வந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், சத்குரு தரப்பில் இந்தச் சந்திப்பு நிகழவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மும்பையில் கலினா விமான நிலையத்திற்கு வெளியில் வரும் படங்கள் இணையத்தில் பரவியுள்ள நிலையில், அவர் இந்தியாவுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. எனினும் இது தவறான தகவல் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மேடையில் தன் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து உருவக்கேலி செய்த தொகுப்பாளர் க்ரிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் மேடையில் ஏறி கன்னத்தில் அறைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியாவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சர்ச்சைக்குப் பிறகு, நடிகர் வில் ஸ்மித், அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் ஆகியோர் இடையில் உரசல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
View this post on Instagram
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சத்குரு ஜக்கி வாசுதேவைச் சந்திக்க வந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் தரப்பில் இந்தச் சந்திப்பு நிகழவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. `சத்குரு சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நடிகர் வில் ஸ்மித்தைச் சமீபத்தில் சந்திக்கவில்லை’ என ஈஷா மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது துருக்கி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சத்குரு ஜக்கி வாசுதேவிடம், நடிகர் வில் ஸ்மித், க்ரிஸ் ராக்கை ஆஸ்கர் விருதுகள் மேடையில் அறைந்தது குறித்து கேட்கப்பட்ட போது, `எனக்கு தெரிந்தவரை, வில் மிகச் சிறந்த மனிதர்.. அதே நேரம், மேடையில் ஏறி, ஒருவரைத் தாக்குவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும்.. மக்கள் தங்கள் முன்னிறுத்தி, வன்முறையின் மூலம் தங்களை வெளிப்படுத்துவது தவறு.. இது வில் ஸ்மித்திற்கு மட்டுமல்ல.. அனைவருக்கும் பொருந்தும்’ எனக் கூறியுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு, நடிகர் வில் ஸ்மித் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு விருந்து அளித்தார். அப்போது அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடனான வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார். அது தற்போது இருவரும் சந்தித்துக் கொண்டதாக பரப்பப்பட்டு வருகிறது.
View this post on Instagram
இதுமட்டுமின்றி, நடிகர் வில் ஸ்மித் இந்தியாவில் இஸ்கான் அமைப்புடன் ஆன்மிக ரீதியாக இணைய வந்திருப்பதாக எழுந்துள்ள தகவல்களை இஸ்கான் அமைப்பு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.