Dhuruv vikram| கபடி! கபடி! - மாரி செல்வராஜ் படத்திற்காக கபடி பயிற்சியில் ஈடுபடும் துருவ்!
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் துருவ்
ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம். நடிகர் என்பதை விட சியான் விக்ரமின் மகன் என்றே துருவ் அறியப்படுகிறார்.காண்பவர்களுக்கு அப்பா - மகன் என்ற உறவை தாண்டி நெருங்கிய நண்பர்கள் போலவே தோன்றும், அந்த அளவிற்கு இருக்கும் இருவரின் பந்தம். துருவிற்கான தனி அடையாளத்தை உருவாக வேண்டும் என்பதுதான் அவரின் தந்தை விக்ரமின் நீண்ட நாள் ஆசை. அதற்காக கதை தேர்வுகளை பார்த்து பார்த்து செய்து வருகிறார் விக்ரம். முன்னதாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி , பசங்க உள்ளிட்ட படங்களில் துருவை நடிக்க வைக்க அப்பட இயக்குநர்கள் முயற்சித்தாக கூறப்படுகிறது.
ஆனால் அப்போது துருவ் டீன் ஏஜில் இருந்ததால் காத்திருந்தாராம் விக்ரம். இந்நிலையில்தான் தெலுங்கில் ஹிட் அடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கையில் எடுத்திருந்தார் இயக்குநர் பாலா. பாலாவிற்கும் விக்ரமிற்குமான நட்பு கோலிவுட் வட்டாரம் அறிந்ததே. பாலாவும் , விக்ரமும் இணைந்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததும் நாம் அறிந்ததே .
எனவே அர்ஜூன் ரெட்டி படத்தின் ரிமேக்கில் துருவை கதாநாயகனாக நடிக்க வைக்க அனுகியபோது, எந்த மறுப்பும் கூறாமல் பச்சை கொடி அசைத்தார் விக்ரம். ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிமேக் உரிமை வேறு இயக்குநருக்கு சென்றது. ஆதித்ய வர்மா என பெயரிடப்பட்ட படம் தெலுங்கு பதிப்பு அளவிற்கு வெற்றியடவில்லை என்றாலும், துருவின் நடிப்பை பலரும் பாராட்டவே செய்தனர்.
அந்த படத்திற்கு பிறகு தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் துருவ் விக்ரம். இந்த படம் தற்போது போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளில் உள்ளது. படத்தில் துருவ் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க , விக்ரம் நெகட்டிவ் ஷேட் நிறைந்த ரோலில் கலக்கியுள்ளதாக தெரிகிறது. அப்பா மகன் காம்போவில் உருவாகும் படம் என்பதால் சியான் ரசிக்ர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் துருவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் விளிம்பு நிலையில் இருக்கும், ஒரு கபடி விளையாட்டு வீரர் பல தடைகளை தாண்டி ஆசிய விளையாட்டு போட்டிகளில் எவ்வாறு சாதிக்கிறார் என்ற ஒன்லைனை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. குறிப்பாக உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டுதான் இந்த படத்தை இயக்க உள்ளாராம் மாரி செல்வராஜ். படத்தில் கபடி வீரராக நடிக்க வேண்டும் என்பதால், கபடி பயிற்சிகளை தொடங்கியுள்ளாராம் நடிகர் துருவ்.பெயரிடப்படாத இந்த படத்தினை பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளார். படத்தின் நடிகர் , நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.