7 Years of Thodari: ரசிகர்களை தெறித்து ஓட விட்ட தனுஷ் - பிரபுசாலமன் கூட்டணி.. ‘தொடரி’ படம் ரிலீசான நாள் இன்று..!
நடிகர் தனுஷ் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தொடரி’ படம் இன்றோடு வெற்றிகரமாக 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தொடரி’ படம் இன்றோடு வெற்றிகரமாக 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கவனிக்க வைத்த பிரபுசாலமன்
என்னதான் கண்ணோடு காண்பதெல்லாம், கொக்கி, லீ, லாடம் உள்ளிட்ட படங்களை பிரபுசாலமன் எடுத்திருந்தாலும் 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா படத்திற்கு பிறகு தான் அவர் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறினார். தொடர்ந்து கும்கி, கயல் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய அவரின் படைப்பாக 2016 ஆம் ஆண்டு வெளியானது ‘தொடரி’.
இந்த படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரீஷ் உத்தமன், ஆர்.வி.உதயகுமார், போஸ் வெங்கட், ராதா ரவி, சின்னி ஜெயந்த், நாசர், கணேஷ் வெங்கட்ராமன், ஏ. வெங்கடேஷ், இமான் அண்ணாச்சி, அஸ்வின் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். இந்தியாவின் முதல் ட்ரெய்ன் மூவி என்று சப் டைட்டிலோடு எக்கச்சக்க எதிர்பார்ப்போடு படம் வெளியானது. ஆனால் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.
படத்தின் கதை
டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் ஒன்று வருகிறது. அந்த ரயில் செயல்படும் கேன்டீனில் வேலைபார்க்கும் ஊழியர் பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷாவின் (பூஜா ஜாவேரி) உதவியாளராக வருகிறார் சரோஜா (கீர்த்தி சுரேஷ்). தனுஷ் முதல் பார்வையிலேயே கீர்த்தி மீது காதல் வயப்படுகிறார். ஆனால் ஆரம்பத்தில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது.
இதனிடையே அமைச்சர் ராதாரவி தனுஷ் முன் ஹரீஷ் உத்தமனை அவமானப்படுத்துகிறார். தொடர்ந்து கீர்த்தியை அடித்த விவகாரத்தில் தனுஷூக்கும், ஹரீஷூக்கும் மோதல் ஏற்படுகிறது. மறுபக்கம் ரயில் ஓட்டுநர் ஆர்.வி.உதயகுமார் உதவியாளர் போஸ் வெங்கட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் இல்லாமலேயே ரயிலை இயக்குகிறார். இதற்குள் ஹரீஷிடம் இருந்து தப்பிக்க இஞ்சினில் தஞ்சம் புகுகிறார் கீர்த்தி சுரேஷ். ரயில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஓட்டுநர் ஆர்.வி.உதயகுமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சரிகிறார். இதனால் ரயில் தறிகெட்டு ஓடுகிறது.
இந்நிலையில் கீர்த்தியை காப்பாற்ற தறிகெட்டு ரயில் ஓடும் நிலையில் இஞ்சினை நோக்கி வரும் பயணிகளை காப்பாற்றி தன் காதலில் வெற்றி பெற்றாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.
ஓடாமல் போன காரணங்கள்
தொடரி படத்தில் உண்மையில் பிரபு சாலமனின் உழைப்பையும், நடிகர்களின் பங்களிப்பையும் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. ஆனால் நம்பவே முடியாத லாஜிக் ஒன்றை வைத்து படத்தை எடுத்திருந்தது மிகப்பெரிய ட்ரோல்களை சந்தித்தது. டீசல் இன்ஜின் வெளியே கீர்த்தி சுரேஷ் உட்கார்ந்திருப்பது, ரயில் தற்கெட்டு ஓடும் போது தனுஷ் பெட்டி மேல் டான்ஸ் ஆடுவது,ரயில் போகும் வேகத்துக்கு இணையாக தொலைக்காட்சியில் நேரலை செய்யும் வாகனம் செல்வது என படம் முழுக்க ஏகப்பட்ட நெகட்டி விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது இமானின் இசை. படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின. அதேசமயம் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரனின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் அருமையாக தெரிந்தது. இந்த படம் தியேட்டரை விட டிவியில் ஒளிபரப்பாகும் போது அதிகமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.