காட்டுப்பசிக்கு விருந்தாகுமா STR 48? சிம்புவின் இத்தனை ஆண்டு தேடல் இதுதானா? தொடங்குகிறது தேசிங்கு பெரியசாமியின் வேட்டை
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் STR 48 படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமியின் 'காட்டுபசிக்கு விருந்து' கேப்ஷன் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது
உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் உருவாகவுள்ள 54வது படத்தின் அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை 6.30க்கு மணிக்கு வெளியானது.
முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குனர் :
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 54வது திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி(Desingh Periyasamy). 2020ம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். முதல் திரைப்படமே வித்தியாசமான கதைக்களம் கொண்ட வெற்றிப்படத்தை கொடுத்து திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
கமல் தயாரிப்பில் இணையும் STR :
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் உலகநாயனுடன் கூட்டணி சேர்கிறார் நடிகர் சிம்பு. அவர் நடிக்கும் 48வது திரைப்படம் என்பதால் தற்காலிகமாக இப்படத்திற்கு STR 48 என தலைப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இப்படம் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்ற தகவல் வெளியானதில் இருந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.
இயக்குனரின் காட்டு பசி தீருமா?
எகிற வைக்கும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள STR 48 படத்தின் அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இதற்கு கேப்ஷனாக 'காட்டுபசிக்கு விருந்து' என தலைப்பிட்டுள்ளார். இந்த கேப்ஷன் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது முதல் படத்திலேயே ஒரு புதுமையான கதைக்களத்துடன் மக்களை சந்தித்த தேசிங்கு பெரியசாமி இப்படம் மூலம் தனது பசிக்கு தீனியாகும் வகையில் ஒரு அழுத்தமான கதையை காட்சிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இத்தனை நாட்களாக சிம்புவின் தேடல் :
மேலும் சமீபத்தில் நடிகர் சிம்பு பேசிய ஒரு வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காகி வருகிறது. "மன்மதன் திரைப்படத்துக்கு பிறகு ஒரு நல்ல திரைக்கதைக்காக நான் இத்தனை நாட்களாக காத்திருந்தேன்" என அவர் பேசியிருந்தார். 2004ம் ஆண்டு ஏ.ஜே. முருகன் இயக்கத்தில் நடிகர் சிம்பு - ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற திரைப்படம் 'மன்மதன்'. இப்படம் சிம்புவின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். அப்படத்திற்கு பிறகு சிம்பு ஏராளமான திரைப்படத்தில் நடித்திருந்தாலும் ஒரு நல்ல ஸ்க்ரிப்ட்காக இன்று வரை காத்திருந்தேன் என கூறியது இந்த STR 48 திரைப்படம் மூலம் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்டைக்கு தயாரா?
தேசிங்கு பெரியசாமியின் காட்டு பசியும், சிம்புவின் ஸ்கிரிப்ட் தேடலும் ஒன்றும் சேர்ந்து ஒரு கலக்கலான வேட்டையை ரசிகர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் இருவரின் ஸ்டேட்மன்ட் மூலம் தெரிகிறது. இவர்களுடன் உலகநாயகனும் கூட்டணி சேர்ந்துள்ளதால் இப்படம் ஒரு மாபெரும் திரைவிருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.