ஆஸ்கர் கதவை தட்டிய ‛தெய்வமகன்’... 53 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சகாப்தம் படைத்த சிவாஜி!
Deivamagan: 53 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், தியேட்டரில் டிக்கெட்டிற்காக ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்த திரைப்படத்தை , இன்று நாம் நினைவு கூர்வது கலையை விரும்பும் ஒவ்வொருவரின் கடமை.
கருப்பு, வெள்ளை படங்களை பார்க்கவே இன்று பலருக்கு எரிச்சலாக இருக்கும். அப்படி ஒரு காலகட்டத்தில் வெளியான திரைப்படம் தெய்வ மகன். சிவாஜியின் நடிப்பை இங்கே கோடிட்டு காட்ட வேண்டியது இல்லை. அவர் நடிப்பை நாடறியும். அதனால் தான் அவர் நடிகர் திலகம்.
இன்று ஆளே இல்லாமல் இருப்பதாக காட்ட முடியும் என்கிற டெக்னாலஜியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், அன்று கலர் ஃபிலிம் கூட இல்லாத ஒரு காலகட்டத்தில், மூன்று வேடங்களில் நடித்து, அதை மெகா ஹிட் ஆக்குவதெல்லாம் சிவாஜி என்கிற மகா கலைஞனால் மட்டுமே சாத்தியம் ஆனது.
1969 செப்டம்பர் 5 ம் தேதி இதே நாளில் தான் வெளியானது தெய்வ மகன். நடிப்புக்கு தீனி போடும் சிவாஜிக்கு, சரியான தீனி போட்ட படம். கதையாகவும் நல்ல உயிரோட்டத்துடன் பயணிக்கும் படம். முகம் கொடூரமாக காட்சியளிக்கும் ஒரு தந்தைக்கு, அதே மாதிரி குழந்தை பிறக்கிறது. தான் சிறு வயதில் சந்தித்த சிரமங்களை அந்த குழந்தையும் சந்திக்க நேரிடும் என்பதால், அந்த குழந்தை தனக்கு வேண்டாம் என்று, அழிக்க கூறிவிடுகிறார் தந்தை. இது தாய்க்கு தெரியாது.
View this post on Instagram
பின்னர் அவர்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறக்கிறது. அதை செல்வ செழிப்போடு வளர்க்கிறார்கள். இதற்கிடையில் அழிக்க கொடுத்த அகோர குழந்தை, ஆசிரமம் ஒன்றில் வளர்கிறது. ஒரு கட்டத்தில் குழந்தை வளர்ந்து இளைஞனான பிறகு, தன் தாய், தந்தையை பார்க்க விரும்புகிறான்.
அவர்களை அடையாளம் அறிந்து அவர்களிடம் செல்கிறான். இறந்து போனதாக நினைத்த மகன், உயிரோடு வந்து நிற்பதை கண்டு தந்தை துடிக்கிறார். தான் தூக்கி எறியப்பட்டதற்கான காரணத்தை மகன் புரிந்து கொண்டானா? அல்லது தன்னை தூக்கிய எறிந்த தாய், தந்தையை பழிவாங்கினானா? தாய்க்கு தன் தலைமகன் உயிரோடு இருப்பது தெரிந்ததா? திடீரென வந்த அண்ணனை, தம்பி எவ்வாறு எதிர்கொண்டான்? இப்படி, பல கேள்விகளோடு பயணிக்கும் படம்.
மூன்று சிவாஜிகள் என்பதால், அவர்களை சுற்றியே கதை வரும். வெவ்வேறு தோற்றத்தில் சிவாஜி சிலாகிக்க வைப்பார். ஏ.சி,திருலோகசந்தர் இயக்கிய இத்திரைப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை, பெரிய பலமாக இருந்தது. இன்று ரீமேக் செய்யும் அளவிற்கான பாடல்கள் தான், தெய்வமகனில் இடம் பெற்றிருந்தன. ஜெயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன் என கதாபாத்திரங்களுக்கு ஏற்ற சிறந்த நடிகர்கள் படத்தில் இடம் பெற்றிருந்தனர்.
View this post on Instagram
சினிமாத்துறையில் உயரிய விருதாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவில், பரிந்துரைக்கப்பட்ட படம், ‛தெய்வ மகன்’ என்பது தான், நமக்கெல்லாம் இப்படம் தந்த பெருமை. 53 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், தியேட்டரில் டிக்கெட்டிற்காக ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்த திரைப்படத்தை , இன்று நினைவு கூர்வது கலையை விரும்பும் ஒவ்வொருவரின் கடமை.