புதிய செல்ஃப் கேர் பிராண்ட்... தீபிகா படுகோனின் புதிய அவதாரம்... வாழ்த்தும் ரசிகர்கள்!
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தீபிகாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 82°E என்ற தனது செல்ஃப் கேர் பிராண்டை தொடங்கியுள்ளார்.
நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ரசிகர்களை அதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 2007ஆம் ஆண்டு ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் ஷாருக்கானுடன் அறிமுகமான கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா, ரன்வீரை மணந்து பாலிவுட் மருமகளாக செட்டில் ஆகிவிட்டார்.
பாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவராக கடந்த 15 ஆண்டுகளாக தீபிகா வலம் வருகிறார். இந்நிலையில், தனது கரியரின் அடுத்தபடியாக சினிமா தாண்டி பிஸ்னஸிலும் கால் பதித்துள்ளார் தீபிகா. அதன்படி 82°E என்ற தனது செல்ஃப் கேர் பிராண்டை தொடங்கியுள்ளார் தீபிகா. இந்த நிறுவனம் முதலில் சரும பராமரிப்பு பொருள்களை இந்த மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் பொருள்கள் உள்நாட்டு நிபுணர்களால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் அனைத்து தயாரிப்புகளும் இந்திய மூலப்பொருளைக் கொண்டு அறிவியல் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டு சரியான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தனது இந்த பிராண்ட் குறித்துப் பேசிய தீபிகா, “நான் உலகில் எங்கிருந்தாலும், எளிய சுய-கவனிப்புச் செயல்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். இது எனக்கு மிகவும் உதவுகிறது.
82°Eஇன் எளிமையான செல்ஃப் கேர் பொருள்கள் மூலம் அவர் அவரது சுயத்துடன் இணைவதற்கு நான் அனைவரையும் ஊக்குவிப்பேன் என்று நம்புகிறேன்.
அதன் முதல் படி, எங்களது சருமப் பராமரிப்பு பொருள்கள். இவை கவனமாக வடிவமைக்கப்பட்டு, மருத்துவரீதியாக பரிசோதிக்கப்பட்டுள்ளன. எனவே உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க எளிய, மகிழ்ச்சியான மற்றும் பயனுள்ள அன்றாட வழியை உருவாக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இது குறித்து முன்னதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தீபிகாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.