Deepika Padukone | அந்த தெருவே கோடீஸ்வரர்கள் தான்.. காஸ்ட்லி ஏரியாவுக்குள் நுழையும் தீபிகா.. வீடு ரூ. 22 கோடி!
பாலிவுட் பிரபலமான தீபிகா படுகோனேவும் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் இணைந்து அலிபாக்கில் பிரம்மாண்ட பங்களாவை வாங்கியுள்ளனர்.
பாலிவுட் பிரபலமான தீபிகா படுகோனேவும் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் இணைந்து அலிபாக்கில் பிரம்மாண்ட பங்களாவை வாங்கியுள்ளனர். இது இவர்களின் 2வது பங்களா. விலை 22 கோடி ரூபாய். இந்த பங்களா அலிபாக் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த பங்களாவை தி எவர்ஸ்டோன் குரூப் உரிமையாளர் ராஜேஷ் ஜக்கியிடமிருந்து தீபிகா வாங்கியுள்ளார்.
ஆனால் இதைப்பற்றி தீபிகா படுகோனே தரப்பில் ஏதும் கூறவில்லை. இந்த வீட்டின் பத்திரம் ஜேப்கி டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சொத்து கே.ஏ.என்டர்ப்ரைசஸ் மற்றும் ஆர்.எஸ் வேர்ல்டு பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.ஏ.என்டர்ப்ரைசஸில் தீபிகா படுகோனே ஒரு பங்குதாரர். அதேபோல், ஆர்.எஸ் வேர்ல்டு நிறுவனத்தில் ரன்வீர் கபூர் பங்குதாரர். அதனால், இந்த வீடு அவர்களின் வீடு என்பது உறுதியாகியுள்ளது. இந்த சொத்து செப்டம்பர் 13 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. ரூ.1.32 கோடி ரூபாய் முத்திரைத் தாள் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.
2.25 ஏக்கரில் பங்களா:
இந்த சொத்து 2.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 18,000 சதுர அடியில் பங்களா அமைந்துள்ளது. 4 ப்ளாட்டுகளை இணைத்து ஒரே ப்ளாட்டாக மாற்றப்பட்டுள்ளது. அலிபாக் பகுதி மிகவும் பகட்டான பகுதி. அங்கு சொத்து வைத்திருப்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பளாகக் கருதப்படுகிறது. ஒரு சதுர அடி ரூ.12,000க்கு விற்கப்படுகிறது.
இந்த பங்களாவில் 5 படுக்கை அறைகள் இருக்கின்றன. இந்தத் தெருவே பில்லினர்ஸ் ஸ்ட்ரீட் என்றழைக்கப்படுகிறது. மாப்கான் என்ற கிராமத்தில் தான் இந்த பங்களா அமைந்துள்ளது. கிஹிம் கடற்கரைக்கு மிகவும் அருகில் இருக்கிறது.
அலிபாக் பகுதியில் பல்வேறு பிரபலங்களும் பங்களா வைத்துள்ளனர். வேதாந்தா ரிசோர்ஸின் நவீன் அகர்வால், ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் கவுதம் சிங்கானியா, யுனிகெம் லேப்ஸ் பிராகாஷ் மோடி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சலீல் பரேக், நைகாவின் சஞ்சய் நய்யார், ஈக்விட்டி முதலீட்டாளர் தேவன் மேத்தா ஆகியோர் இந்தப் பகுதியில் பிரம்மாண்ட பங்களாவை வைத்துள்ளனர்.
இந்தப் பகுதியில் உள்ள பங்களாக்கள் குறைந்தபட்சம் 1 ஏக்கர் அதிகபட்சமாக 10 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ளன. விலை ரூ.10 கோடி முதல் ரூ.70 கோடி வரை உள்ளன. மும்பையிலிருந்து படகில் சென்றால் 45 நிமிடங்கள் பயணத்தில் அலிபாக் உள்ளது.
தீபிகா ரன்வீர் சிங் தம்பதிக்கு மும்பை பிரபாவதி பகுதியில் 4 படுக்கை அறை கொண்ட வீடு இருக்கிறது. பெங்களூருவில் தீபிகா படுகோனேவுக்கும் அவரது தந்தை பிரகாஷ் படுகோனேவுக்கும் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.