Deepika Padukone: சர்வதேச பிராண்டின் தூதரான தீபிகா படுகோன் - இனிமே இவர்தான் நம்பர் ஒன்
சர்வதேச அளவில் தீபிகா படுகோனுக்கு கிடைத்த அங்கீகாரத்தால் பாலிவுட் வட்டாரம் பரபரப்பு
டைசன் நிறுவனத்தின் சர்வதேச ஹேர்கேர் தூதராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2007ம் ஆண்டு பாலிவுட்டில் ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான தீபிகா படுகோன், முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தவிர்க்க முடியாத நடிகையாக உயர்ந்துள்ள தீபிகா படுகோன் உலக அளவில் பிரபலமாகியுள்ளார். அண்மையில் இவரின் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் வசூலை வாரி குவித்தது. எந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பில் அசத்தும் தீபிகா படுகோன், ஹாலிவுட் படத்தை போன்று ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தி இருப்பார்.
திரைத்துறையில் கலக்கும் தீபிகா படுகோன், நடிப்பில் மட்டும் இல்லாமல் உலகளவில் பிராண்ட் அம்பாசெடராக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் லூயிஸ் உய்ட்டன்(Louis Vuitton) நிறுவனத்தின் உலகளாவிய தூதராக தீபிகா படுகோன் அறிவிக்கப்பட்டார். அதன் மூலம் பாரிஸ், மாஸ்கோ மற்றும் மும்பை பகுதிகளில் முன்னணி பிராண்டுகளின் தூதராக தீபிகா படுகோன் அறியப்பட்டார். இது தவிர கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒப்பந்த தூதராகவும், பிரெஞ்சு சொகுசு பேஷன் ஹவுசின் சர்வதேச பிராண்ட் தூதராக தீபிகா படுகோன் அறிவிக்கப்பட்டார். அண்மையில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் இடம்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதற்கெல்லாம் மேலாக, நடந்து முடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராக இருந்த தீபிகா படுகோன், உலகளவில் இந்தியாவை பெருமை அடைய செய்தார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் கோப்பையை அறிமுகப்படும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் தீபிகா படுகோன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டைசன்(Dyson) நிறுவனம் ஹேர் கேருக்காக தீபிகா படுகோனை சர்வதேச தூதராக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய டைசன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அங்கித் ஜெயின், “தீபிகா படுகோனை எங்களின் தூதராக அறிவிப்பில் மகிழ்ச்சி அடைகிறோம். தலைமுடியின் ஸ்டைல் மற்றும் பராமரிப்பில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டைசன் ஹேர் கேர் டெக்னாலஜி புது புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. எங்களின் இந்த பணியில் தீபிகா படுகோனும் இணைந்து இருப்பது மகிழ்ச்சி என்றும், அனைத்து வகையான ஹேர் ஸ்டைல் தொடர்பாகவும், பராமரிப்பு குறித்தும் தீபிகா படுகோன் விவாதிப்பார்” என்றும் கூறியுள்ளார்.
ஹேர் ஸ்டைலில் தீபிகா படுகோனை சர்வதேச தூதராக அறிவித்துள்ள டைசன் நிறுவனம், அழகு தொடர்பான 20 புதிய பிராண்டுகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.