"எங்களுடன் சேருங்கள்" - காப்புரிமை விவகாரத்தில் இளையராஜாவிற்கு ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள்!
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜாவிற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான டைட்டில் அறிவிப்பு டீசராக சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற வா வா பக்கம் வா பாடலில் இடம்பெற்ற டிஸ்கோ என்ற இசை ஒலிக்கும்.
வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா:
தங்கமகன் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த நிலையில், இளையராஜா தனது அனுமதியில்லாமல் அவரது இசையை பயன்படுத்தியதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இளையராஜாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இளையராஜா விவகாரத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது,
தனி நபராக போராடும் இளையராஜா:
“இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கு காபிரைட் கேட்கிறார் என்று அவர் மீது குறை சொல்கிறார்கள். ஆனால், இந்த விவகாரம் என்னவென்று மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை. இளையராஜா தனி நபராக தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக வழக்குத் தொடர்ந்திருப்பதால், அது பலருக்கும் பெரிய விவகாரமாக தெரிகிறது.
இசையமைப்பாளர்கள் அனைவரும் ஐ.பி.ஆர்.எஸ். (IBRS) என்ற ஒரு அமைப்பில் இருக்கிறோம். அதில் தொடக்கத்தில் இளையராஜாவும் இருந்தார். ஆனால், தொடக்கத்தில் இருந்த சில முறைகேடுகள் காரணமாக இளையராஜா அந்த அமைப்பில் இருந்து நீங்கி விட்டார். இதனால், அவர் தன்னுடைய விவகாரத்தை தனிப்பட்ட முறையில் பார்த்துக் கொள்கிறார்.
குறிப்பிட்ட தொகை வரவு:
அந்த அமைப்பில் இருக்கும் எங்களுக்கு, இப்போது எங்களுடைய பாடல்கள் எந்த இடத்தில் எல்லாம் ஒலிக்கப்படுகிறது என்ற பட்டியலை அனுப்பிவைப்பார்கள். அதன்மூலம் எங்களுடைய பாடல்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பி தொகை வரும். நான் ஒரு சில திரைப்படங்களுக்குத்தான் பாடல்கள் எழுதி இருக்கிறேன். அதற்கு கூட எனக்கு குறிப்பிட்ட தொகை வந்து கொண்டிருக்கிறது.
இளையராஜா, கங்கை அமரன், யுவன்சங்கர் ராஜா எல்லாம் எத்தனை படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு பணம் வரும்? அதுபோல ஏதாவது பிரச்சினை என்றாலும் அந்த அமைப்பின் நிர்வாகிகளே அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள். இளையராஜா அதில் இருந்து வெளியே வந்துவிட்டதால், அவர் தனியாக வழக்கு தொடுத்து வருகிறார். அதனால், அது பெரிய விஷயமாக இருக்கிறது.
சேர்ந்து கொள்ளுங்கள்:
தனியாக வழக்குத் தொடர வேண்டும் என்றால், அவருடைய வாழ்நாள் முழுவதும் அவர் வழக்குத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு தனி நபராக நான் இளையராஜாவிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், மீண்டும் ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பில் சேர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Vairamuthu - Gangai Amaran : மக்கள் மக்கள் பேச தொடங்கிவிட்டனர்.. கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து!
மேலும் படிக்க: Vettaiyan: வேட்டையன் ஷூட்டிங்கில் இரு பெரும் சூப்பர் ஸ்டார்கள்.. ரஜினிகாந்த் - அமிதாப் புகைப்படங்கள் வைரல்!