18 Years Of Thavamai Thavamirunthu: ஒரு ஊருக்குள் ஒரு அம்மா அப்பா... 18 ஆண்டுகளை கடந்த சேரனின் தவமாய் தவமிருந்து
சேரன் இயக்கத்தில் வெளியான தவமாய் தவமிருந்து திரைப்படம் வெளியாகி இன்று 18 ஆண்டுகள் நிறைவடைகின்றன
இயக்குநர் சேரன் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான தவமாய் தவமிருந்து படம் வெளியாகி இன்றுடன் 18 வருடங்கள் கடந்துள்ளன
ஃபேமிலி என்டர்டெயினர்
கடைசியாக திரையரங்குகளில் உங்களது குடும்பத்துடன் நீங்கள் ரசித்து பார்த்து படம் எது. குடும்பத்துடன் ரசித்துப் பார்த்த திரைப்படம் என்றால் உங்கள் அப்பா, அம்மா, மனைவி, குழந்தை, தாத்தா அல்லது பாட்டி இப்படி குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் அந்தப் படத்துடன் ஒன்றியிருக்க வேண்டும். கைதி படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்துவிட்டு அது என் அம்மாவிற்கு பிடித்தது என நான் நம்பத் தயாராக இல்லை.
இந்திய சினிமா அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் இருக்கும் அல்லது இருந்த மிகப்பெரிய சாதகமான அம்சம் என்னவென்றால் நாடகியத் தன்மையை (drama) அது கொண்டிருந்தது.
இன்று பலகோடிகள் செலவில் தொழில் நுட்பரீதியாக எத்தனையோ புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சில படங்கள் எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையான கதை சொல்லும் வழியாக மக்களிடம் நல்ல பாராட்டுக்களைப் பெற்றுவிடுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? தவமாய் தவமிருந்து மாதிரியானப் படங்கள் மக்களால் எல்லா காலத்திலும் ரசிக்கப்படுவது ஏன்?
இன்று ஒரு படத்தை அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை தொலைக்காட்சியில் பார்க்க முடிவது அரிதானதாகிவிட்டது. ஆனால் மேல் குறிப்பிட்டப் படங்களை நம் பெற்றோர்கள் மட்டுமில்லை எத்தனையோ முறை சலிக்காமல் பார்த்திருக்கிறோம் இல்லையா?
மக்கள் தங்களைப் போன்ற ஒரு குடும்பத்தைப் பற்றிய ஒரு கதையைப் பார்க்கிறோம் என்கிற ஒரு உணர்வை இந்தப் படங்கள் ஏற்படுத்துவதுதான் இதற்கு காரணம். தங்களது கஷ்டங்களை சற்று விலகி நின்று பார்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு வகையில் இந்த படங்கள் உதவுகின்றன. மேலும் அதிகபட்சம் அடுத்த ஒரு வாரத்திற்கான நம்பிக்கைகளை எடுத்துக்கொண்டு தங்களது வாழ்க்கை ஓட்டத்திற்குத் திரும்ப அவர்களால் முடிகிறது.
தவமாய் தவமிருந்து
தீபாவளிக்கு தன்னுடைய மகன்கள் புது ஆடைகளும் பட்டாசுகளும் கேட்கிறார்கள். கையில் சுத்தமாக காசில்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் முத்தையா( ராஜ்கிரண்). தன்னுடைய வறுமையில் குழந்தைகளை எப்படி படிக்க வைக்கப் போகிறோம். தன்னுடைய கனவுகள் நிஜமாகாமல் போய்விடுமோ என்கிற அச்சம் அவரது முகத்தில் தெரிகிறது. அதிகாலையில் ஆற்றங்கரையில் நின்றுகொண்டு நாடகத்திற்கு ஒத்திகை பார்க்கும் ஒரு குழுவை வேடிக்கைப் பார்த்தபடி நிற்கிறார்கள் தந்தையும் மகன்களும். ஒரு பாட்டாக நாடகம் அமைந்திருக்கிறது.
”ஓ ஆக்காட்டிப் பறவையே நீ எங்க எல்லாம் முட்டை இட்டாய்? அதில் எத்தனை பிழைத்தது எத்தனை இறந்தது” என்று ஆக்காட்டி பறவையிடம் கேள்வி கேட்கிறான்.
ஆக்காட்டி பறவை பதில் சொல்கிறது. " நான் மொத்தம் மூன்று முட்டை இட்டேன். மூன்று முட்டையிலும் குஞ்சுகள் பொறித்தன. மூத்த குஞ்சிற்கு இரை தேடி நான்கு மலைகள் சுற்றி வந்தேன். நடு குஞ்சிற்கு இரைதேடி மூன்று மலைகள் சுற்றி வந்தேன். இளைய குஞ்சிற்கு இரைதேடி போகையில் வேடன் என்னை கண்ணி வைத்து பிடித்தான். நான் பெத்த மக்களை விட்டு நான் பரலோகம் போகப்போகிறேன் " என்று கதறி அழுகிறது ஆக்காட்டிப் பறவை.
தனது இரு மகன்களையும் அணைத்தபடி கண்களில் நீர் தேங்கி நிற்கிறார் அந்த தகப்பன்.
திடீரென்று அந்த ஆக்காட்டிப் பறவையை கண்ணியில் இருந்து விடுவிக்கிறார்கள் சிலர். "ஏழைக் குருவியே நீ ஏங்கியழக் கூடாது என்று பாடல் உச்சத்தில் ஒலிக்கிறது. ஒரு பறவை தன் குஞ்சுகளை சேர்வதற்காக பாடப்படும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியில் இருந்தும் தனக்கான செய்தியை எடுத்துக் கொள்கிறார் அங்கு நிற்கும் தந்தை. இந்த மொத்த படத்தையும் இந்த ஒரு காட்சியில் நாம் புரிந்துகொள்ள முடியும்.
கதை
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் தன்னுடைய தந்தை முத்தையாவை ( ராஜ்கிரண்) பார்க்க வருகிறார் ராமலிங்கம்( சேரன்) .ராமலிங்கத்தின் பார்வையில் இருந்து தொடங்குகிறது முத்தையா மற்றும் அவரது மனைவி சாரதா என்கிற ஒரு தந்தை தன்னுடைய இரு மகன்கள் ராமலிங்கம் மற்றும் ராமநாதன் ஆகிய இருவரையும் வளர்ப்பதற்காக செய்த தியாகங்களின் கதை. தங்களது குழந்தைகளுக்காக தங்களுக்கு எந்த வித ஆசைகளையும் வைத்துக் கொள்ளாமல் அவர்களுகளுக்காக மட்டுமே வாழும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் திருப்பி செய்வது என்ன என்கிற கேள்வியையே இந்தப் படம் முன்வைக்கிறது.