Chandramukhi 2: ‘என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?’ .. சந்திரமுகி 2 படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ்.. கலாய்க்கும் ரசிகர்கள்..!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் இருந்து 2வது பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் இருந்து 2வது பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சந்திரமுகி படம்
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி படம் வெளியானது. பி.வாசு இயக்கிய இந்த படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், சோனுசூட், வினீத், மாளவிகா, செம்மீன் ஷீலா ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்ற சந்திரமுகி படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரித்திருந்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் இன்றும் டிவியில் ஒளிபரப்பினால் டிஆர்பி எகிறும் அளவுக்கு ஆடியன்ஸ் உள்ளனர். இப்படியான நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பி.வாசு சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
உருவானது சந்திரமுகி 2
இதற்கிடையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சந்திரமுகி 2 படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த படத்தில் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அதேசமயம் வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், ராதிகா என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. மரகதமணி இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2 படம் செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வேட்டையன் ராஜா, சந்திரமுகி கேரக்டரின் தோற்றம் வெளியானது. தொடர்ந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி “ஸ்வாகதாஞ்சலி” பாடல் முதல் பாடலாக வெளியானது. ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ள இந்த பாடலை சைதன்யா பிரசாத் எழுதியிருந்தார்.
வெளியானது இரண்டாவது பாடல்
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் இருந்து மொருனியே என்னும் பாடல் வெளியாகியுள்ளது. நேற்று இதற்கான ப்ரோமோ வெளியான நிலையில் மிக வித்தியாசமாக இப்பாடல் உருவாகியிருப்பதாக அதனைப் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த மொருனியே பாடலை கேட்கும் போது ஆர்.ஆர்.ஆர். பாடல் தான் நியாபகம் வருவதாக இணையவாசிகள் தெரிவித்து உள்ளனர். எஸ்.பி.பி. சரண் மற்றும் ஹரிகா நாராயண் பாடியுள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.