Bonda Mani: போண்டா மணியாக மாறிய கேத்தீஸ்வரன்.. பலரும் அறியாத அவரின் சினிமா பயணம்!
Bonda Mani: சினிமாவில் அறிமுகமாகும்போது கேத்தீஸ்வரன் என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டு போண்டா மணி என அறிமுகமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60.
முதல் படம்
‘பவுனு பவுனு தான்’ எனும் கே.பாக்கியராஜின் திரைப்படம் மூலம் அறிமுகமான போண்டா மணி, இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்த இவர், நான் பெத்த மகனே, ஐயா, வின்னர், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வசீகரா என நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தன் தனித்துவ காமெடி பாத்திரங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த போண்டா மணிக்கு அவரது நிலை பற்றி இணையத்தில் அறிய வந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேவையான உதவிகளை துரிதப்படுத்தினார். மேலும் விஜய் சேதுபதி தொடங்கி திரை நட்சத்திரங்கள் எனப் பலரும் அவரும் உதவிகள் செய்தனர்.
போண்டா மணி கடைசியாக பேசிய உருக்கமான வீடியோ!#RIPBondamani #BondaMani pic.twitter.com/QDJwoeoj53
— ABP Nadu (@abpnadu) December 24, 2023
இலங்கை பூர்வீகம்
கடந்த ஓராண்டாக வாரம் இருமுறை போண்டா மணி டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.
இலங்கையைச் சேர்ந்த போண்டா மணியின் இயற்பெயர் கேத்தீஸ்வரன். இந்நிலையில் இவர் இலங்கையில் இருந்து சினிமா ஆசையில் சென்னை வந்தபோது ஒரு போண்டாவை மட்டுமே வாங்கி அதை பல நாள் உணவாக உட்கொண்டு தன் நாள்களைக் கடந்து வந்தாராம்.
பெயர் மாற்றியது இப்படி தான்..
இந்நிலையில், இவர் சினிமாவில் அறிமுகமாகும்போது கேத்தீஸ்வரன் என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டு போண்டா மணி என அறிமுகமாகியுள்ளார். தன் குருவான கவுண்ட மணி எப்படி கவுண்டர் மணி எனும் பெயரில் அறிமுகமானாரோ, அதேபோல் தானும் அறிமுகமாக விரும்பி இப்படி போண்டா மணி என சினிமாவில் அறிமுகமானாராம்.
இறுதியாக இந்த ஆண்டு பிக்பாஸ் பாலாஜி நடிப்பில் வெளியான ‘வரலாம் வரலாம் வா’ என்ற திரைப்படத்தில் போண்டா மணி நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் போண்டா மணியின் இறுதி ஊர்வலம், இன்று மாலை 4 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து தொடங்கும் எனவும், இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, பல்லாவரம் பொழிச்சலூரில் இருந்து ஊர்வலமாக எடுக்கப்பட்டு மாலை 5 மணியளவில் குரோம்பேட்டை மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Salaar Review: எடுபட்டதா சலாரின் சாகசம்? தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா பிரபாஸ்? முழு விமர்சனம் இதோ!