என் கதையை சாகும்வரை சொல்வேன்..பத்திரிகையாளர் கேள்விக்கு கடும்கோபத்தில் பதிலளித்த மாரி செல்வராஜ்
திருநெல்வேலியில் பைசன் படத்தின் பத்திர்கையாளர்கள் சந்திப்பின் போது பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் காத்திரமாக பதிலளித்துள்ளார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான பைசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. பைசன் படத்தை தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் ரசிகர்களுடன் காணச் சென்றது பைசன் படக்குழு. அப்போது பத்திரிகையாளர்களின் கேள்வியால் மாரி செல்வராஜ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கடுப்பான மாரி செல்வராஜ்
தொடர்ந்து சாதிய பிரச்சனைகளை மட்டுமே வைத்து படமெடுப்பது குறித்து மாரி செல்வராஜிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு பதிலளித்த மார் செல்வராஜ் " ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரச்சனை இருக்கும். என்னோட வாழ்க்கையில நான் கண்ட பெரிய பேய் சாதி தான். அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு சாதியை கடந்து வரசொல்லி என்னுடைய கதையில் வைத்துக்கொண்டே இருக்கிறேன். சாதியை பரவலான விவாதத்திற்கு உட்படுத்த முயற்சி செய்கிறேன். இந்த விவாதம் ரொம்ப நாள் கழித்து நடப்பதால் அது முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனால் போகப்போக இந்த உரையாடல் சாதாரணமாக மாறும். எனக்கு தெரியும் நான் எப்படியான ஒரு வாழ்க்கையில் இருந்த் வெளியே போனேன் என்று. அப்படியான வலியை எனக்கு அடுத்த தலைமுறை சந்திக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.
சாதியால் வலியை அனுபவித்த ஒருத்தரை அவருடைய வலியை சொல்லக்கூடாது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும். ஒரு கதை ஏன் எடுக்கப்பட்டது மக்கள் முடிவு பண்ணட்டும். நான் இந்த நாட்டோட பிரஜை. என்னை பாதித்த கதையை , என் அப்பாவின் கதையை , என் தாத்தாவின் கதையை சொல்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு அதை நான் சாகுறவைரயும் சொல்வேன். நான் அதை சொல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை அரசாங்கள் முடிவு பண்ணும். சட்டம் முடிவு பண்ணும். ஒரு தனிமனிதன் முடிவு பண்ண கூடாது. எல்லா சட்டத்திற்கும் உட்பட்டு தான் கதையை யோசிக்கிறேன். மாரி செல்வராஜ் சாதிக்கு எதிரானவர் என்கிற ஸ்டாம்ப் குத்தப்படும். அதை நான் வரவேற்கிறேன். சாதியால் மாரி செல்வராஜ் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள். தமிழ் சினிமாவில் அப்படி ஒருத்தர் இருக்காரா என்று எனக்கு தெரியாது. அதை மறந்துவிட்டு நீ சாதாரணமா ஆடு சாதாரணமா பாடு என்றால் என்னால் முடியாது . மாரி செல்வராஜ் தொடர்ந்து சாதியை எதிர்ப்பார் என்பது தான் என்னுடைய முத்திரை. என்னுடைய ஐந்து படத்தையும் முதலமைச்சர் பாராட்டியிருக்கிறார். எனக்கு விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கு , ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் என்னை கொண்டாடிட்டு இருக்கு. யாரோ பத்து பேர் சொல்கிறார் என்று மறுபடி மறுபடியும் ஒரே கேள்வியை கேட்கிறீர்கள். கஷ்டப்பட்டு வேதனையும் வலியும் சேர்ந்து ஒரு நரேட்டிவை மாற்ற நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கேயோ உட்கார்ந்து ஒரு 50 பேர் சொல்வார்கள் என்றால் சொல்லதான் செய்வார்கள். ஆபரேஷன் பண்ணும்போது நோயாளி கத்ததான் செய்வான். ஆனால் அதை சரிசெய்வது எங்களது கடமை. " என அவர் கடுமையாக பதிலளித்தார்





















