Bigg Boss Tamil: பிக் பாஸ் சீசன் 9...தொகுப்பாளராக மாஸ் காட்டும் விஜய் சேதுபதி! கடந்த வந்த பாதை!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (அக்டோபர் 5) பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை சுவாரஸ்யமானது.

Bigg Boss Tamil: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (அக்டோபர் 5) பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை சுவாரஸ்யமானது. அதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
பிக் பாஸ் சீசன் 9:
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 5) தொடங்க உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இவர் கடந்து வந்த பாதை என்பது அனைவருக்கும் உத்வேகத்தை கொடுக்க கூடியது.
விஜய் சேதுபதி கடந்த வந்த பாதை:
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி ராஜபாளையத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி பிறந்தவர். பள்ளிப்படிப்பை விருதுநகரில் முடித்த இவர் இளங்கலை வணிகவியல் படித்து இருக்கிறார். அதே நேரம் குடும்ப சூழல் காரணமாக துபாய்க்கு வேலைக்கு சென்ற இவர் அங்கு சில வருடங்கள் வேலை செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த இவர் எப்படியாவது நடிகராக வேண்டும் என்ற முனைப்பில் இருந்துள்ளார்.
அப்போது கூத்துப்பட்டறை ஒன்றில் கணக்காளராக வேலை கிடைத்திருக்கிறது. வெள்ளித்திரையில் அறிமுகமாவதற்கு முன்னார் ‘பெண்’ என்ற சீரியல் ஒன்றில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமானார்.
பின்னர் ஒரு சில குறும்படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மறுபுறம் ஒரு சில படங்களிலும் சாதரண வேடங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு சீனி ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்தது.
பின்னர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம், சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இச்சூழலில் தான் கடந்த ஆண்டு முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.





















