Bigg Boss 6 Tamil: ‛அட பேதில போவான் முருகேசா...’ முருங்கைக் காய் கடிதத்தால் கடுப்பான ஜி.பி.முத்து!
Bigg Boss 6 Tamil: ‛சாம்பார்ல முருங்கைக்காய் போட்டா தான் மணமா இருக்கும். திங்குறதுக்கு நல்லா இருக்கும்’ -ஜிபி முத்து
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து கலகலப்பாக்கி வருவதில், முன்னாள் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவுக்கு பெரும் பங்கு உள்ளது. மனிதர், வீட்டிற்குள் சென்ற நொடியிலிருந்து தான் வரும் காட்சியில் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழர்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஜி.பி.முத்து, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின் இன்னும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்திருக்கிறார். அவருக்கு மட்டுமல்லாமல், நிகழ்ச்சிக்கும் பெரிய பலமாக மாறி வரும் ஜி.பி.முத்துவை கண்டு சக போட்டியாளர்கள் கொஞ்சம் பயந்து தான் போயிருக்கிறார்கள்.போட்டியாளர்கள் பயப்படுவதில் ஆச்சரியமில்லை; தொகுப்பாளர் கமலஹாசனே கொஞ்சம் பயந்து தான் போயிருக்கிறார்.
நிகழ்ச்சி தொடங்கிய நாளிலேயே ‛ஆதாம்’ யார் என்று கேட்டு, கமலை திக்குமுக்காட வைத்த ஜி.பி.முத்து, அடுத்தடுத்து சோஷியல் மீடியா மீம்களுக்கு கன்டெண்ட் கொடுத்து வருகிறார். போதாக்குறைக்கு , டாஸ்க் வெற்றி, கேப்டன் தேர்வு என அனைத்து ஏரியாவிலும் கில்லியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். கடந்த சனி, ஞாயிறு நடந்த கமல் சந்திப்பில், ஜி.பி.முத்துக்கு சில பார்சல்கள் தபால் வழியாக அனுப்பப்பட்டது.
அதை பிரித்த பார்த்த ஜி.பி.முத்துவுக்கு அதிர்ச்சி; ஒரு பார்சலில் முருங்கை காய்கள் இருந்தன. முன்னதாக பிக்பாஸ் கேமரா முன்பு, தனக்கு சாம்பார் வைக்க முருங்கை காய் வேண்டும் என ஜி.பி.முத்து கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் தான் அவருக்கு முருங்கை காய் அனுப்பப்பட்டிருந்தது. முருங்கை காய் தமிழகத்தில் கொஞ்சம் விவகாரமான காயாக பார்க்கப்படுவதால், அது கொஞ்சம் நக்கலும், கிண்டலுமாய் நகர்த்தப்பட்டது.
Peyilapovan Murugesa😂😂😂#GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil6 #Biggboss #BiggBossTamil pic.twitter.com/ujTt0SJY04
— GP Muthu Army (@drkuttysiva) October 18, 2022
இதற்கிடையில் தனக்கு வந்த கடிதத்தை மைனா நந்தினி மற்றும் அமுதவாணனிடம் படித்து காண்பித்தார் ஜி.பி.முத்து. அப்போது, ஒரு கடிதத்தில் முருங்கைக் காய் எதற்கு கேட்டீங்க என முருகேசன் என்ற ஒருவர் கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை படித்துவிட்டு, ஜி.பி.முத்து கூறியது இது தான்...
‛‛சாம்பார்ல முருங்கைக்காய் போட்டா தான் மணமா இருக்கும். திங்குறதுக்கு நல்லா இருக்கும். நல்லா ருசியா இருக்கும். மனிதனுக்கு முக்கியமான பொருளு முருங்கைக்காய். அதுக்காக தான் முருங்கைக்காய் கேட்டேன். அட பேதில போவான் முருகேசா... முருங்கைக்காய் மனுசனுக்கு முக்கியமான பொருளு... அதை ஊர்ல வந்து சொல்றேன்... செத்தப் பயலே!’’
என்று தனக்கான பாணியில் சொல்லி முடிக்க, அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் சிரித்து சிரித்து ஒருவழியாகிவிட்டனர். இன்னும் ஜி.பி.முத்து என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ, பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்லாது, வெளியில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களும் அதை எதிர்பார்த்து தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்பு முருங்கைக்காய் என்றால், அது இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜின் அடையாளமாக பார்க்கப்பட்டது. முந்தானை முடிச்சு படத்தில் முருங்கை காயை அவர் கையாண்ட விதம் காரணமாக அந்த அடையாளம் வந்தது. தற்போது முருங்கைக்காய் ஜி.பி.முத்துவின் அடையாளமாக மாறி வருகிறது.