AK64 update : பிரஷாந்த் நீலுக்கு முன்னாடி அஜித்தின் வேற ஒரு சம்பவம் லோடிங்... 'ஏகே 64' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்...
AK64 : அஜித் குமார் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'ஏ.கே. 64' படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படத்திற்கு பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியுடன் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இது தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் இப்படத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் அதே வேளையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கே.ஜி.எஃப், சலார் உள்ளிட்ட பிரமாண்ட படங்களின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடிக்க நடிகர் அஜித் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
இப்படங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
ஆனால் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களுக்கு அடுத்தபடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்க இருக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் அஜித் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது தான் அஜித் நடிக்கும் 'ஏகே 64' படமாக இருக்கும் என்றும் அதை சிறுத்தை சிவா இயக்க உள்ளார் என்றும் கூறப்படுகின்றன.
அப்படி அஜித் - பிரஷாந்த் நீல் கூட்டணி சேர்வது உறுதியானால் ஏகே 65 மற்றும் ஏகே 66 படங்களை பிரஷாந்த் நீல் இயக்குவார் என்றும் அதன் மூலம் கே.ஜி.எஃப் யுனிவர்சஸில் இணைய உள்ளார் என ரசிகர்கள் அவர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.