ஷூட்டிங்குக்கு தாமதமாக வந்த நெல்சன்.. விஜய் அட்வைஸ்.. `பீஸ்ட்’ அனுபவம் பகிரும் இயக்குநர்!
தான் படப்பிடிப்பிற்குத் தாமதமாக செல்லும் வழக்கம் கொண்டவர் என்பதை நடிகர் விஜய் அறிந்த கொண்ட பிறகு ,என்ன நடந்தது என்பதையும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் இயக்குநர் நெல்சன்.
சமீபத்தில் வெளியான `பீஸ்ட்’ திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன், படப்பிடிப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பேசினார். தான் படப்பிடிப்பிற்குத் தாமதமாக செல்லும் வழக்கம் கொண்டவர் என்பதை நடிகர் விஜய் அறிந்த கொண்ட பிறகு ,என்ன நடந்தது என்பதையும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் இயக்குநர் நெல்சன்.
இயக்குநர் நெல்சன் சமீபத்தில் பேட்டி ஒன்றில், `9 மணிக்குப் படப்பிடிப்பு என்று முடிவுசெய்யப்பட்டால் சில இயக்குநர்கள் 7 மணிக்கும், 7.30 மணிக்கும் வருவது வழக்கம். நான் பெரும்பாலும் 8 மணி, 8.30 மணி, சில நேரங்களில் 9 மணிக்கும் சென்றிருக்கிறேன். `கோலமாவு கோகிலா’ படத்தில் பணியாற்றிய போதும் இப்படித்தான்.. அப்போது நயன்தாரா மேடம் எனக்கு ஃபோன் செய்வார்.. 8.45 மணிக்குக் கால் செய்து `நீங்கள் இன்னும் வந்திருக்க மாட்டீர்கள் என்று தெரியும்.. அன்று அணிந்திருந்த அதே உடை தானா இன்றும்?’ எனக் கேட்டுவிட்டு, ஃபோனை வைத்து விடுவார். அவரின் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது.. ஒவ்வொருவருக்கும் ஒரு வழக்கம் இருக்கும்.. என் வழக்கத்தை அவர் புரிந்து வைத்திருந்தார். இது `பீஸ்ட்’ படத்தில் பிரச்னை ஏற்படுத்தியது’ என்றார்.
தொடர்ந்து அவர், `விஜய் சார் பெரும்பாலும் 7 மணி அல்லது 7.30 மணிக்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார்.. அவர் வந்த சில நேரத்திற்குப் பிறகே நான் தாமதமாக வருவேன்.. இவ்வாறு நான் தாமதமாக வருவது பிரச்னையாக இருப்பதாக எனக்கு தகவல்கள் வர, நான் விஜய் சாரிடமே ஃபோனில் பேசினேன்.. `சார் நான் லேட்டா வர்ற மாதிரி உங்களுக்குத் தோணுதா?’ என்று கேட்டேன்.. `இல்லையே’ என்று அவர் கூறினார்.. நான் அவரிடம், `நான் லேட்டா தான் வர்றேன்.. 9.30 மணிக்கு ஷாட் என்றால் அது நடந்துவிடும்’ என்றேன்.. அப்போது அவர், `உனக்கு எப்போ வேலை இருக்கோ, அப்போ வந்தா போதும்.. நான் வர்றேன்னா எனக்கு வேலை இருக்கும்.. அதனால வர்றேன்.. நான் சீக்கிரம் வருவதால் நீயும் அப்படி வரணும்னு அவசியம் இல்ல..
ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்.. அதை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை’ என்று சொன்னார்.. அப்போது தான் இந்தப் படப்பிடிப்பில் எனக்கு முழு சுதந்திரம் இருப்பதை உணர்ந்தேன்.. அப்போது அவர் மேல் இருந்த மரியாதை கூடியது.. `என்ன நீங்க வந்த அப்புறம் அவர் லேட்டா வர்றாரு’ என அவரிடம் சிலர் புகார் கூறியிருந்தார்கள்.. ஆனால் அவற்றைப் புறம் தள்ளிவிட்டு எனக்கான சுதந்திரத்தை அவர் அளித்ததற்குப் பிறகு, அவர் மீது அதில் இருந்து மரியாதை அதிகமானது’ என்று கூறியுள்ளார்.