Ayan Mukerji: 2026இல் பிரம்மாஸ்திரா 2... ட்ரோல்களை தாண்டி அடுத்தடுத்த பாகங்களை இயக்க முடிவு செய்த இயக்குநர்!
பிரம்மாஸ்திரா படத்தின் அடுத்த பாகங்கள் வெளியாக உள்ள ஆண்டு குறித்து அப்படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி அறிவித்துள்ளார்.
பிரம்மாஸ்திரா படத்தின் அடுத்த பாகங்கள் வெளியாக உள்ள ஆண்டு குறித்து அப்படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி அறிவித்துள்ளார்.
நடிகர்கள் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூன், மௌனி ராய் ஆகியோர் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் பிரம்மாஸ்திரா பாகம் 1. ’வேக் அப் சித்’, ’ஏ ஜவானி ஹே திவானி’ என் இரண்டு படங்களை மட்டுமே இதற்கு முன் இயக்கியுள்ள அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இதனிடையே செப்டெம்பர் 9ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிரம்மாஸ்திரா படம் உலகம் முழுவதும் திரையரங்முகளில் வெளியானது.
இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியான பிரமாஸ்திரா படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 430 கோடிகளுக்கும் மேல் பிரம்மாஸ்திரா வசூலை அள்ளி சென்ற ஆண்டு பாலிவுட்டில் அதிக வசூலை ஈட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்வெல் உலகம் போல் ’அஸ்திரா வெர்ஸ்’ புராணக் கதை போன்ற அம்சங்களுடன் வெளியான இந்தப் படம் இந்தி ஆடியன்ஸ் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்ற நிலையில், பிற மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் மாறாக ட்ரோல்களையே அள்ளியது.
தொடர்ந்து சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிரம்மாஸ்திரா படம் வெளியானது. இந்நிலையில் பிரம்மாஸ்திரா படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து பிரம்மாஸ்திரா இயக்குநர் அயன் முகர்ஜி பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "பிரம்மாஸ்திரா ட்ரையாலஜி, அஸ்ட்ராவர்ஸூக்கான நேரம் வந்துவிட்டது. பாகம் ஒன்றில் நீங்கள் கொடுத்த அனைத்து அன்பையும் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டேன்.
தற்போது இரண்டாம், மூன்றாம் பாகங்களுக்கான கதையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறேன். மூன்று. முதல் பாகத்தை விட அடுத்தடுத்த பாகங்கள் பெரியதாக இருக்கும்.
அடுத்த அடுத்த பாகங்களின் ஸ்கிரிப்டை கச்சிதமாக முடிக்க இன்னும் அவகாசம் தேவை. மேலும், இந்த இரண்டு படங்களையும் ஒன்றாக எடுக்க முடிவு செய்துள்ளோம். 2 படங்களையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்யவும் உள்ளோம்.
இன்னொரு செய்தியையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிரபஞ்சம் சமீபத்தில் எனக்கு ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்கியது. ஒரு சிறப்பு திரைப்படத்தில் அடியெடுத்து வைக்கவும் உள்ளேன்.
அது குறித்து மீண்டும் நேரம் கிடைக்கும்போது பகிர்கிறேன். இந்திய சினிமாவுக்கு மிக முக்கியமான ஒரு விஷயத்துக்கு பங்களிப்பு செய்யப்போகிறேன்” என்றும் அயன் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பதான் படத்துக்கு முன்னதாக சித்தார்த் ஆனந்த் இயக்கிய வார் படத்தின் இரண்டாம் பாகத்தை அயன் முகர்ஜி தற்போது இயக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அயன் முகர்ஜி தன்னுடைய இந்தப் பதிவில் அதனை சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனால் பிரம்மாஸ்திரா 2, 3ஆம் பாகங்கள் இதனால் 2026, 2027ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.