Atlee | படிச்சக் கதை புடிச்சுப் போச்சாம்.. புஷ்பாவுக்கு ஸ்கெட்ச் போட்ட அட்லீ! உருவாகுது தெறி கூட்டணி!
இயக்குநர் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. அவர் ராஜா ராணி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். இயக்குநர் மணிரத்னத்தின் மௌனராகம் திரைப்படத்தை தழுவிதான் ராஜா ராணி உருவாகியிருப்பதாக படம் வெளியானபோது பலர் கூறினர்.
இருப்பினும் அட்லீ எழுதிய வசனங்களும், திரைக்கதையும், அதை காட்சிப்படுத்திய விதமும் ரசிகர்களுக்கு பிடித்திருந்ததால் அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்கள் வரிசையில் இணைந்தார் அட்லீ. அவருக்கென்று தனி ரசிகர்களும் உருவாக தொடங்கினர்.
ராஜா ராணி வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. அதன்படி அவரை வைத்து தெறி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படமும் மணிரத்னம் கதை எழுதிய சத்ரியனை தழுவி உருவாகியிருப்பதாக பலர் கூறினர். இருப்பினும், தெறி படம் பெரும் ஹிட்டடித்தது.
இதனையடுத்து விஜய்யுடன் மீண்டும் கைகோர்த்த அட்லீ அவரை வைத்து மெர்சல் படத்தையும், அதன் பிறகு பிகில் படத்தையும் இயக்கினார். மெர்சலுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தாலும் பிகில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த சூழலில் இயக்குநர் அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஹிந்தி படம் ஒன்றை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு அவர் மீண்டும் விஜய்யுடன் இணைவார் என கூறப்பட்டது.
இந்நிலையில், அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ சொன்ன கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்துவிட்டதால் அடுத்த படத்தை அவர் இயக்க சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியான நிலையில் அட்லீயுடன் இணையும் இந்தப் படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: IND vs WI, Series Schedule: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கான மைதானங்கள் அறிவிப்பு