Ashish Vidyarthi Marriage: விஜய்யின் ரீல் அப்பா 60 வயதில் 2வது திருமணம்.. வாழ்த்து மழையில் நனையும் ஆஷிஷ் வித்யார்த்தி..!
தற்போது 60 வயதை எட்டியுள்ள ஆஷிஷ் வித்யார்த்தி அஸ்ஸாமைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இன்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிரபல வில்லன் நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி தன் 60ஆவது வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிரபல வில்லன் ஆஷிஷ்:
2000களின் தொடக்கத்தில் தில் படத்தின் மூலம் கோலிவுட்டில் மிரட்டல் வில்லனாக அடி எடுத்து வைத்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தொடர்ந்து தமிழில் பகவதி, ஏழுமலை, பாபா என அடுத்தடுத்து நடித்து கவனமீர்த்த ஆஷிஷ் வித்யார்த்தி, நடிகர் விஜய்க்கு அப்பாவாக கில்லி, சூர்யாவுடன் ஆறு, ஜீவாவுடன் ஈ என பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் நடித்து வெற்றிகரமான நடிகராக வலம் வந்தார்.
கேரள தந்தைக்குப் பிறந்த இந்தி நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, பெங்காலி என பன்மொழி நடிகராக வலம் வந்துள்ளார்.
இரண்டாவது திருமணம்:
மேலும், நடிப்பு தாண்டி, ப்ளாகர், விளாகர், பாட் கேஸ்ட் என பன்முகத் திறமையாளராக வலம் வரும் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீப காலமாக தன் யூட்யூப் சானலில் படு ஆக்டிவ்வாக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது 60 வயதை எட்டியுள்ள ஆஷிஷ் வித்யார்த்தி, அஸ்ஸாமைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இன்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இணையத்தில் இவர்களது திருமணப் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், கேரள பாரம்பரிய உடையில் ஆஷிஷ் வித்யார்த்தியும், ரூபாலி அஸ்ஸாமிய உடையிலும் இந்தப் புகைப்படத்தில் தோற்றமளிக்கின்றனர். மேலும், “என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், ரூபாலியை திருமணம் செய்துள்ளது ஒரு அசாதாரண உணர்வு. காலையில் சிறப்புத் திருமணம் (court marriage) செய்துகொண்டு, மாலையில் நண்பர்களுக்காக கெட் டு கெதர் நடத்தினோம்” என ஆஷிஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி - ரூபாலி தம்பதிக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
முன்னதாக பிரபல மூத்த நடிகையான ஷாகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பரூவாவை திருமணம் செய்துகொண்ட ஆஷிஷ் வித்யார்த்திக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தற்போது அஸ்ஸாம், கவுஹாத்தியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான ரூபாலியை தற்போது ஆஷிஷ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தேசிய விருது:
1991ஆம் ஆண்டு முதல் இந்திய சினிமாவில் நடித்து வரும் ஆஷிஷ் வித்யார்த்தி, தன் சிறப்பான நடிப்புக்காக 1995ஆம் ஆண்டு த்ரோகால் (Drohkaal) எனும் இந்தி படத்துக்காக தேசிய விருதையும், நந்தி, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.
தமிழில் குறிப்பாக கில்லி படத்தில் நடிகர் விஜய்யின் அப்பாவாகவும் போலீசாகவும் காமெடியும் எமோஷனும் கலந்து ஜாலியான நடிப்பை வெளிப்படுத்திய ஆஷிஷ் வித்யார்த்தியின் கதாபாத்திரம், இன்றளவும் மிகவும் பிரபலமானதாக விளங்கி வருகிறது.
இறுதியாக 2015ஆம் ஆண்டு தனுஷின் அனேகன், மற்றும் ஆர்.கே உடன் என் வழி தனி வழி ஆகிய படங்களில் நடித்திருந்த ஆஷிஷ் வித்யார்த்தி அதன் பின் இந்தி, மலையாள சினிமா பக்கம் கரை ஒதுங்கிவிட்டார். இந்நிலையில், ஆஷிஷ் - ரூபாலி தம்பதிக்கு பல மொழி ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.