Happy Birthday A.R. Rahman: அன்பும் அமைதியுமே இவர் ஏந்தும் ஆயுதம்! ஏ ஆர் ரகுமானின் பிறந்தநாள் ஸ்பெஷல்!
ஒரு தலைமுறை கடந்துவிட்டது. ரஹ்மானின் மகன் இசையமைக்க தொடங்கிவிட்டார். ஆனால், இன்னமும் அந்த புதுமை மாறாமல் நவயுக இளைஞர்களை வசீகரிக்கும் கலை ரஹ்மானிடமிருந்து அகலவில்லை.
இசையோடு கைக்கோர்த்து நடக்க தோன்றா உணர்வுகள் எதுவும் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. வெற்றிக்களிப்பிலும் மூலையில் முடங்கிப் போக செய்யும் துக்கத்திலும் இசையே உடன் பயணிக்கிறது. ஆர்ப்பரிப்பில் துள்ளும் கால்களுக்கு ஆகாயத்தில் பறக்கும் மாயையை இசையின்றி வேறெதுவும் அருளாது. கைகள் பற்றி ஆறுதல் சொல்ல யாருமில்லா வேளையிலும் உற்றத்துணையாக இசையே நம்மை பற்றிக்கொள்கிறது. அப்படியான இசையை தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு கோடிக்கணக்கானோரின் வழித்துணையாக கால் நூற்றாண்டை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று!
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த படத்திற்காக ரஹ்மான் அமைத்திருந்த சில டியுன்களை நடிகர் விவேக்கிடம் பாலச்சந்தர் அவர்கள் போட்டு காண்பித்து, எப்படி இருக்கிறது? என கேட்டிருக்கிறார். சில டியுன்களை கேட்டுப்பார்த்த விவேக், என்ன சார் இவ்ளோ சிம்பிளா இருக்கு எனக் கூற, 'அதுதான்யா வேணும்' என பாலச்சந்தர் அவர்கள் கூறியிருக்கிறார். நடிகர் விவேக் கேட்டுவிட்டு ரொம்ப சிம்பிளாக இருக்கிறது எனக்கூறிய அந்த ரோஜா ஆல்பம் அறிமுக இசையமைப்பாளரான ரஹ்மானுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது.
இந்தியாவில் இசையில் புதிய அலையை உண்டாக்கியது. மார்கழி மாதத்து பனிக்கு ஒத்த குளுமையோடும் ஜிவ்வென்ற புதுமையோடும் புது வெள்ளை மழையாக இளசுகளின் மனதில் ரஹ்மானை குடிகொள்ள வைத்தது. இன்று வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. 90 களில் பதின்ம பருவத்தவராக, கல்லூரி இளைஞர்களாக ரஹ்மானின் இசையை ரசித்துக் கொண்டிருந்தவர்களின் பிள்ளைகள் இப்போது வளர்ந்து அதே பதின்ம பருவத்தில் 'அத்ராங்கி ரே' ஆல்பத்தை ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தலைமுறை கடந்துவிட்டது. ரஹ்மானின் மகன் இசையமைக்க தொடங்கிவிட்டார். ஆனால், இன்னமும் அந்த புதுமை மாறாமல் நவயுக இளைஞர்களை வசீகரிக்கும் கலை ரஹ்மானிடமிருந்து அகலவில்லை.
ரஹ்மானின் ரோஜா ஆல்பத்தை விவேக் ரசிக்க தவறிவிட்டதாகவோ குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவோ கருத வேண்டியதில்லை. உண்மையில் ரஹ்மானின் இசையை ஒரே வரியில் கன கச்சிதமாக விவேக்கை தவிர வேறு யாரும் வரையறுத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. 'ரொம்ப சிம்பிளா இருக்கே' விவேக்கின் இந்த கமெண்ட்தான் ரஹ்மானிய இசையின் அடிநாதம். பெரிய சிக்கல்கள் இல்லாத அந்த சிம்பிளான இசைதான் ரஹ்மானின் மூலதனம். உந்தன் தேசத்தின் குரலிலும்..ஒரே கனாவிலும் நெஞ்சே எழுவிலும் என்ன பிரம்மாண்டம் இருக்கிறது? எளிமையான ட்யுன்கள். தாய்நாட்டை சொந்தமண்ணை பிரிந்திருப்பவனின் ஏக்கத்தை, லட்சியத்தை நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்கொள்பவனின் வேட்கையை, மீண்டெழ நினைப்பவனின் நெஞ்சுரத்தை அந்த சூழலில் ஆற்றாமைமிக்க அவனுக்குள் இருந்தே ரஹ்மான் பாடியதை போன்ற உணர்வையே இவை கொடுக்கும். ஆனால், இவை ஏற்படுத்தும் தாக்கம் பெரிதாக இருக்கும். பிரிவின் துயரில் வாடும் யாரும் உந்தன் தேசத்தின் குரலை கேட்டு கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.
ரஹ்மானுக்கு பிறகு அறிமுகமான எத்தனையோ இசையமைப்பாளர்கள் பல ஹிட் பாடல்களையும் ஆல்பங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரின் இசை நம்முடைய ஆன்மாவோடு உரையாடியதை போன்று வேறு எவருடைய இசையும் உரையாடியதாக தெரியவில்லை. காரணம், ரஹ்மானிய இசையின் மையம் அன்புதானே அன்றி வேறில்லை. 'என் முன்பு இரண்டு அன்பு, வெறுப்பு என இரண்டு வாய்ப்புகழ் இருந்தது. நான் அன்பை தேர்ந்தெடுத்தேன். இங்கே நிற்கிறேன்' ஆஸ்கர் விருதை வாங்கிவிட்டு ரஹ்மான் இப்படி பேசியிருந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து குடும்ப பாரத்தை ஏற்க வேண்டிய சூழ்நிலையிலும் கட்டணம் கட்டாததால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட போதும் அடுத்தது என்ன என தெரியாத நிராகதியான நிலையிலும் ரஹ்மானின் முன்பு இரண்டு பாதைகள் இருந்தது.
ஒன்று அன்பால் நிறைந்த வசந்தமான பாதை, இன்னொன்று வெறுப்பால் நிறைந்த வறண்ட பாதை. தன்னை புறக்கணித்த சமூகத்தை தனக்கு எல்லாமுமாக இருந்த தந்தையை பறித்துக் கொண்ட கடவுளை என அவரின் அன்றைய இக்கட்டான சூழலுக்கு காரணமான அத்தனையையும் வெறுக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. அவர்கள் மீதான வெறுப்பையை தனக்கான எரிபொருளாக மாற்றிக்கொண்டு வெறியோடு வேகமாக அவர் முன்னேறியிருக்கலாம். ஆனால், அவர் தேர்ந்தெடுத்தது அன்பை மட்டுமே. ஆன்மீகத்தில் முன்பை விட தீவிர உள்ளன்போடு ஈடுபட்டார். தன்னை சுற்றியிருப்பவர்களை கூடுதலாக நேசிக்க தொடங்கினார். தன்னுடைய ஆன்மாவை உணர தொடங்கினார். அது சொல்லும் சேதியை பின்பற்ற தொடங்கினார். அன்பும் அமைதியுமே உலகின் இருண்மையையெல்லாம் அழித்தொழிக்கக்கூடிய பேராயுதம் என்பதை உணர்ந்தார். அன்பின் மகத்துவத்தையும் அமைதியின் உன்னதத்தையும் உலகிற்கு சொல்ல தன்னுடைய இசையை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார். விளைவு, இசைப்புயலாக உருவெடுத்து இன்றும் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்.
Happy Birthday A.R. Rahman!!!!