Uma Ramanan Passed Away: காற்றில் கரைந்த ஆனந்த ராகம்.. பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்
Uma Ramanan Passed Away : இளையராஜா இசையில் பல நூறு பாடல்களை பாடிய பின்னணி பாடகர் உமா ரமணன் காலமானார்
உமா ரமணன் ( Uma Ramanan)
இளையராஜா இசையில் பூங்கதவே தாழ்திறவா , நீ பாதி நான் பாதி , ஆனந்த ராகம் கேட்கும் காலம் உள்கிட்ட பல பிரபல பாடல்களை பாடியவர் உமா ரமணன். சென்னை அடையாறில் தனது கணவர் ரமணனுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலை குன்றியிருந்துள்ளது. இப்படியான நிலையில் மே 1 தேதி இரவு உமா ரமணன் காலமானார். அவரது இழப்பு தமிழ் இசைத்துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமா ரமணனின் இறுதி சடங்குகள் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று மே 2 அம் தேதி மாலை நடைபெற இருக்கின்றன.
உமா ரமணனின் இசைப்பயணம்
தனது சிறிய வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டவராகவும் கல்லூரி நிகழ்வுகளில் பாடி நிறைய பரிசுகளை வாங்கியிருப்பதாகவும் உமா ரமணன் தனது நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். எம்.ஏ பட்டப் படிப்பு முடித்ததும் ஏர் ஹாஸ்டெஸ் ஆக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்திருக்கிறது.
கணவர் ரமணனை சந்தித்தது
இப்படியான சூழலில் தான் 1972 ல் பாடகர் ரமணனை சந்தித்தார் உமா. 'மியூசியானோ' என்கிற தனது இசைக்குழுவில் சேர்ந்து உமாவை ரமணன் பாடக் கேட்டிருக்கிறார். பின் ரமணனுடன் இசைக் கச்சேரிகளில் ரமணனுடன் பாட தொடங்கினார் உமா. தனது கணவராவதற்கு முன் ரமணனிடம் இருந்து 30 ரூபாய் சம்பளமாக வாங்கியதை உமா ரமணன் நேர்காணல் ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார்.
தொடர்ந்து ரமணனுடன் இசைக் கச்சேரிகளில் பாடிவந்த உமாவிடம் ' நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?' என்று ரமணன் கேட்க உமா சம்மதம் தெரிவித்திருக்கிறார். நண்பர்களாக இருந்த இந்த ஜோடி 1976 ஆம் ஆண்டு தம்பதிகளாக மாறினார்கள்.
தனது கணவருடன் சேர்ந்து கிட்டத்தட்ட 6000 மேடை கச்சேரிகளில் பாடியிருக்கிறார் உமா ரமணன். 1980 முதல் 1990 வரை இந்த தம்பதியினரின் கச்சேரிக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரமணன் இசையமைத்த ' நீரோட்டம்' படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் உமா. இதன் பிறகு அவருக்கு நிறைய இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புகள் வரத்தொடங்கின.
இளையராஜாவின் இசையில் உமா ரமணன்
இளையராஜா இசையமைத்த ' இன்னும் சில பக்கங்கள்' படத்தில் முதலில் பாடினார் உமா ரமணன். ஆனால் நிழல்கள் படத்தின் 'பூங்கதவே தாழ் திற வா' பாடல் தான் தனக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்ததாக உமா ரமணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 'ஆகாய வெண்ணிலாவே' , ' நீ பாதி நான் பாதி,' பூபாலம் இசைக்கும் , ஆனந்த ராகம் உள்ளிட்ட அடுத்தடுத்தப் பாடல்கள் இசையுலகில் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. ஹிட் லிஸ்ட் சிங்கர் என்று அவருக்கு பட்டமே கொடுத்திருக்கிறார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் பாடும் வாய்ப்புகள் குறைந்து வந்தாலும் தொடர்ச்சியாக இசைக் கச்சேரிகளில் பாடிவந்தார் உமா ரமணன். விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் 'கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு' பாடலை தான் பாடியதில் தனக்கு பிடித்த பாடல்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று இளம் பாடகர்கள் மிகவும் சவாலான பாடல்கள் என்று கருதும் பாடல்களில் உமா ரமணன் பாடிய ஆனந்த ராகம் கேட்கும் காலம் பாடலும் ஒன்று. இனி ஒரு முறையும் அந்த குரலின் ஆனந்த ராகத்தை நம்மால் கேட்க முடியாது. உமா ரமணனுக்கு அஞ்சலி.