21 Years Of Mounam Pesiyadhe: அமீரின் முதல் படம்.. த்ரிஷா அறிமுகம்.. 21 ஆண்டுகளைக் கடந்த ‘மெளனம் பேசியதே’!
அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ‘மெளனம் பேசியதே' திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்துள்ளன.
மெளனம் பேசியதே
அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் மெளனம் பேசியதே, த்ரிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்தார். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் கடந்துள்ளன.
காதல் என்றாலே வெறுக்கும் கதாநாயகன்
மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பெரும்பாலான ஆண்களால் ரசிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். சூர்யாவின் கதாபாத்திர அமைப்பு அப்படியானது. பொதுவாக ஆண்கள் என்றாலே பெண்ணைப் பார்த்த இடத்திலேயே காதலில் விழுந்துவிடுவார்கள் என்கிற இமேஜுக்கு மாறாக, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன் கெளதம்.
பெண்களின் மேல், காதலின் மேல் எல்லாம் அவனுக்கு மாறுபட்ட ஒரு எண்ணம் இருக்கிறது. எந்தவித சிக்கலிலும் தேவையில்லாமல் மாட்டாமல் எதார்த்தமாக பேசக்கூடியவன். இப்படி சுயமரியாதையுடன் இருக்கும் ஒருவனாகவே கெளதம் இருப்பார். அதே நேரத்தில் திமிரும் அவரிடம் இருக்கத்தான் செய்கிறது. இப்போது பார்க்கையில் கெளதம் பேசும் பல கருத்துக்கள் விமர்சனத்திற்குரியவையாக தெரிகின்றன.
தனது நண்பன் வேறு ஒரு பெண்ணை காதலிக்க, அவனுக்கு வீட்டில் பார்த்திருக்கும் பெண் சந்தியாவிடம் (த்ரிஷா) திருமணத்தை நிறுத்தச் சொல்லி பேசப் போகிறார் கெளதம். ஆனால் தனக்கும் இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி கெளதமை குழப்பிவிடுகிறார் சந்தியா. நாட்கள் செல்ல செல்ல சந்தியா தன்னை காதலிக்கிறாரோ என்று நினைத்துக் கொண்டு தானும் சந்தியாவை காதலிக்கத் தொடங்குகிறார் கெளதம். ஆனால் சந்தியா கெளதமை காதலிக்கவில்லை, அவள் வேறு ஒருவனை தன் காதலன் என்று அறிமுகப்படுத்துகிறாள்.
ட்விஸ்ட் வைத்த அமீர்
பெண்கள் மீது ஏற்கெனவே பெரிதும் நல்ல அபிப்பிராயம் இல்லாத கெளதம், மீண்டும் “காதல் செய்தால் பாவம் , பெண்கள் எல்லாம் மாயம்” என்று பாட்டு பாடிக் கொண்டு சுற்றத் தொடங்குகிறார். இந்தப் படத்தை இயக்குநர் அமீர் இப்படியே முடிக்க நினைத்திருந்தால் வெறும் கெளதம் போன்ற ஆண்களின் தன்னகங்காரத்திற்கு தீனி போடும் ஒரு படமாக மெளனம் பேசியதே படம் இருந்திருக்கும். ஆனால் கடைசியாக ஒரு சின்ன ட்விஸ்டை இந்தப் படத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த அர்த்தத்தையும் மாற்றிவிடுகிறார்.
சந்தியா தன்னை காதலிப்பதாக நினைத்து அவள் தனக்காக என்னவெல்லாம் செய்தாள் என்று கெளதம் நினைத்தானோ, அதை எல்லாம் செய்தது லைலா. கெளதமின் கல்லூரி காலத்தில் அவனை உருகி உருகி காதலித்தவள். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே அவனை தூரத்தில் இருந்து காதலிக்கத் தயாராக இருப்பவர்.
கடைசியில் சந்தியாவுடம் கெளதம் காரில் ஏறிச் செல்வது பார்வையாளர்களுக்கு ஒரு நொடி குழப்பத்தையே ஏற்படுத்தும். சந்தியாவை காதலித்த கெளதம் எப்படி உடனே லைலாவின் மீது காதல் கொள்கிறார் என்று. ஆனால் காதல் என்றால் என்னவென்பதை கெளதமுக்கு உணர்த்தியது லைலாவின் செயல்கள்தான். சந்தியா கெளதமின் காதலுக்கு வெறும் ஒரு உருவமாக மட்டுமே இருந்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் காதல் என்கிற அடிப்படை உணர்வு இல்லாமல் திரிவதை இயக்குநர் அமீர் விரும்பவில்லை!