(Source: ECI/ABP News/ABP Majha)
4 Years Of Nerkonda Paarvai: மாறுபட்ட கேரக்டரில் அஜித்.. சிந்திக்க வைத்த 'நேர்கொண்ட பார்வை’ .. இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு..!
அஜித் குமார் நடிப்பில் நடித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன
தான் நடிக்கும் படங்கள் மூலமாகவே தனது ரசிகர்களை சில நல்ல கதைகளை ஒரு நடிகர் பார்க்க வைக்க முடியும். அதை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் செய்தார்
நேர்கொண்ட பார்வை உருவான கதை
தீரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹெச்.வினோத் அடுத்து எந்த நடிகரை இயக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. அஜித்குமாரை வைத்து அவர் ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது அவரது கதை இல்லையென்றும் ஏதோ இந்தி படத்தின் ரீமேக் என்றும் தகவல்வல்கள் வெளியாகின.
அடுத்த சில வாரங்களில் பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்து வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய பிங்க் என்கிற படத்தை அஜித்தை வைத்து ஹெச்.வினோத் ரீமேக் செய்ய இருக்கிறார் என்று உறுதியானது . பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அஜித் ரசிகர்களின் கவனம் பிங்க் என்கிற படத்தை நோக்கி சென்றது.
பிங்க் படத்தின் கதை
மூன்று பெண்கள் தங்களது நட்பு வட்டத்தில் இருக்கும் ஆண்களுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கிறார்கள். அங்கு அந்தப் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயலும் ஆண்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அவர்களில் ஒருவனை தாக்கி அங்கிருந்து தப்பிச் செல்கிறார் டாப்ஸி. இதனை மனதில் வைத்துக் கொண்டு அவரை கடத்தி அவரை முறைகேடாக நடந்துகொள்கிறார்கள் அவர்கள். தங்களது குரலை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் இந்தப் பெண்களுக்கு வயதான வழக்கறிஞர் ஒருவர் உதவி செய்கிறார்.
செல்வம் நிறைந்த அதிகார பலம் நிறைந்த அந்த ஆண்களின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு அவர்கள் எதிராக வாதாடுகிறார் அமிதாப்பச்சன். படித்த, மாடர்னாக உடையணியும், ஆண்களிடம் தாராளமாக உரையாடும் பெண்கள் மீது ஆண்கள் எத்தகைய மதிப்பீடுகளை உருவாக்குகிறார்கள், தங்களது எதிர்பார்ப்புகளை எப்படி அவர்கள் மீது சுமத்துகிறார்கள். எந்த ஒரு தவறும் எப்படி அவர்களை நோக்கி மடைமாற்றப் படுகிறது இதுமாதிரியான விஷயங்களை மிக எளிய மொழியில் உரையாடும் ஒரு படமாக அமைந்தது பிங்க்.
அஜித் எப்படி?
படம் என்னவோ நல்ல படம் தான் ஆனால் இதில் எங்கள் அஜித் குமார் எப்படி நடிக்க முடியும் . அஜித் என்றாலே மாஸ்தானே, இந்த படத்தில் என்ன மாஸ் இருக்க போகிறது? என்பது அவரது ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. நேர்கொண்ட பார்வை என்கிற படம் திரையரங்கில் வெளியானது. ரசிகர்கள் சமாதானம் அடையும்படி சில மாஸ் காட்சிகளுடன் தான் என்றாலும். தனக்கு கொடுக்கப் பட்ட வேலையை மிக நேர்த்தியாக செய்திருந்தார் ஹெச்.வினோத். மிகப் பெரியளவிலான வெற்றி இல்லையென்றாலும் பல வருடங்களுக்குப் பிறகு வழக்கமான அதே ஆக்ஷன் கதையாக இல்லாமல் தனது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கு ஒரு படத்தில் அஜித் குமார் நடித்தார்.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் - ஹெச்.வினோத் - போனிகபூர் கூட்டணி வலிமை, துணிவு ஆகிய படங்களில் ஒன்றிணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.