AK 64: ரெடியா மாமே.. அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு எப்போது தெரியுமா?
அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். நடிகராக மட்டுமின்றி ரேஸிங்கிலும் அசத்தும் இவர் தற்போது தனது முழு கவனத்தையும் ரேஸிங்கில் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது அடுத்த படம் எப்போது? பட அறிவிப்பு எப்போது? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அஜித்தின் அடுத்த படம்:
நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போவதாக தகவல்கள் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அவரது அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அஜித்தின் அடுத்த படம் அமையும் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கிய குட் பேட் அக்லி படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருந்தது. அதனால், படம் 200 கோடி ரூபாய் வசூலை கடந்தது.
திரைக்கதை பணியில் ஆதிக்:
அதேசமயம், சில தரப்பினர் இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற படமாக அமையவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. இதனால், அஜித்தின் 64வது படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஆதிக் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தாண்டு இறுதியில் இந்த புதிய படத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்று ஏற்கனவே அஜித்குமார் அறிவித்திருந்தார். இந்த படத்தை ஃபேன்பாய் சம்பவமாக மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்க ஆதிக் ரவிச்சந்திரன் திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு:
இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ரசிகர்களில் பெரும்பாலோனோர் ஜிவி பிரகாஷே இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஏனென்றால், ஜிவி பிரகாஷ் - ஆதிக் ரவிச்சந்திரன் காம்போ ரசிகர்களை கவர்ந்த கூட்டணியாக அமைந்து வருகிறது.
இந்தாண்டு இறுதியில் அஜித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ள மற்ற நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடந்து வருகிறது.





















