‛போலீஸ் படமாக எடுக்க நினைக்கவில்லை... ஆனால் அது அமைந்துவிட்டது’ -வலிமை பற்றி ஹெச். வினோத் சிறப்பு பேட்டி!
உண்மையில் படம் அப்படி இருக்காது. நான் என்ன எடுக்க நினைத்தேனோ, அதை எடுத்திருக்கிறேன். திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் ஓபன் மைண்டுடன் படத்தை பார்க்க வரவேண்டும் என்றார் ஹெச். வினோத்.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் பொங்களுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ஹெச்.வினோத். ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப்படம் குறித்து இயக்குநர் வினோத் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்சியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
வலிமைப்படத்தின் மூலக்கரு என்ன?
இது என்னுடைய இராண்டாவது கதை. இந்தக் கதையை நான் போலீஸ் படமாக எடுக்க நினைக்க வில்லை. ஆனால் படம் அப்படி வந்து விட்டது. இன்றைய இளையதலைமுறையினரும் அவர்கள் குடும்பமும், இன்று நிறைய பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
அதிலிருந்து இரண்டு பிரச்னைகளை எடுத்து முன்வைக்க நினைத்தேன். அந்த பிரச்னைகள் இங்கு ஹீரோவுக்கு நடக்கிறது. அந்தப்பிரச்னைகளை ஹீரோ எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கரு.
அஜித்துக்காக எழுதிய கதையில் அவருக்காக ஏதாவது சமரசம் செய்தீர்களா?
இதில், என் பக்கம் சமரசம் ஏதுமில்லை. உண்மையில் அவர்தான் சமரசம் செய்திருக்கிறார். காரணம் அவர் என்னுடன் பணியாற்றுவதை விட, பக்கா, கமர்சியல் படம் கொடுக்கும் இயக்குநர்களுடன் பணியாற்ற முடியும். அந்த விதத்தில் அவர்தான் சமரசம் செய்ததாக நினைக்கிறேன்.
ஒரு ஸ்டாருடன் பணியாற்றுவது எந்த விதத்தில் அட்வாண்டேஜ் ஆக இருக்கிறது?
ரீச் தான் பெரிய அட்வாண்டேஜ். ஒரு ஸ்டாருடன் பணியாற்றும் போது, அதனை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல 10 சதவித உழைப்பை போட்டால் போதும். காரணம் அந்த ஸ்டாருக்கென்று ஒரு பேன் பேஸ் இருக்கும்.
அவர்கள் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படம் குறித்தான எந்த தகவல் வந்தாலும் பேசுவார்கள். இதுமட்டுமன்றி, சாதாரண பார்வையாளர்களுக்கும் படம் எளிதாக சென்று விடும்.
அஜித்துக்காக கதையில் மாற்றங்களை செய்தீர்கள் என்று சொன்னீர்கள்? ஒரு கேரக்டரை பில்ட் செய்வதற்கு ஸ்டாரின் பலம் தேவைப்படுகிறதா?
சில மனிதர்களை பார்க்கும் போது, நமக்கு ‘வாவ்’ என்று தோன்றும். அப்படியான மனிதர்களில் ஒருவர்தான் அஜித். அந்த ஓவ் ஃபேக்டரோடு அவரை திரையில் பார்க்கும் போது அது அடுத்த கட்டத்திற்கு செல்லும். அஜித்தை பொறுத்த வரையில், இயக்குநருக்கு அவரிடம் இருந்து ஒன்று தேவைப்பட்டால், அதை எந்த விதத்திலும் சமரசம் இல்லாமல் தந்து விடுவார். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தலாம். கதாபாத்திரத்துக்கு தேவையான அனைத்தையும் அவர் செய்து கொடுப்பார்.
இந்தப்படத்தில், அஜித் சாரின் கேரக்டருக்கு கட்டுமஸ்தான உடற்கட்டு தேவைப்பட்டது. அதே போல அவரது கருப்பான தலைமுடியும் தேவைப்பட்டது. முடிக்கு டை அடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவர் தயக்கம் காட்டினார். பின்னர் கதாபாத்திரத்திற்கு அது தேவை என்பதை புரிந்து கொண்டு செய்து கொடுத்தார். இந்தப்படத்தில் அவரது கேரக்டர் ஜாலியாகவும் அதே நேரத்தில் நுட்பமானதாகவும் இருக்கும்.
நமது சமூகத்தில் நிகழும் குற்றங்கள் மிகவும் சிக்கலானவையாக இருக்கிறது. அதனை அணுக நாம் பெரிய ஜீனியஸாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் இங்கு சிஸ்டம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் புத்திசாலியாக இருப்பது அவசியமாகிறாது. அப்படியான கேரக்டர்தான் அஜித் சாருடையது.
ஹூமா குரேஷி கேரக்டரை பற்றி சொல்லுங்கள்?
இதுவரை அஜித்துடன் நடிக்காத ஒரு ஹீரோயினை கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தோம். அஜித் சாரின் உடலமைப்பிற்கும் ஏற்ற கதாநாயகியாக தேடினோம். ஆரம்பத்தில் இந்தக் கேரக்டருக்கு காதல் இருக்கும் படிதான் எழுதியிருந்தேன். ஆனால் கொரோனா ஊரடங்கிற்கு கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பின்னர் அவரை விசாரணை குழுவில் இணையும் ஒரு நபராக மாற்றம் செய்தேன்.
ஹூமா தைரியமான நடிகை. அவர் லாரி ஓட்டுவது போல காட்சிகள் படத்தில் இருந்தன. நான் லாரி ஓட்டுவது ரிஸ்க் என்று கூறினேன். அதற்கு அவர் நான் லாரி ஓட்டுவதை பார்த்து விட்டு பின்னர் பேசுங்கள் என்றார். ஆனால் அவர் ‘ அசால்டா லாரி ஓட்டுனாங்க’. ஹைதாராபாத்தை சுற்றி 10 கிமீ வரை அவர் லாரி ஓட்டினார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு உங்களுக்கு அழுத்தம் தரும் வகையில் அமைந்ததா?
அஜித் ரசிகர்களிடம் இருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒரு வகையில் பலமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அது அழுத்தம் கொடுப்பதாகவே இருந்தது. ஆனால் இறுதியாக அந்த பலமாகவே அமைந்திருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இன்னும் கடுமையாக உழைக்க வைக்கிறது. ரசிகர்கள் அவர்கள் சம்பளத்தை கொடுத்து, படம் பார்க்க வருகிறார்கள். அது என்னுடைய சம்பளத்தை உயர்த்துகிறது.
ஒவ்வொருவரும் வலிமை படத்தை பற்றி ஒவ்வொன்றை கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் படம் அப்படி இருக்காது. நான் என்ன எடுக்க நினைத்தேனோ, அதை எடுத்திருக்கிறேன். திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் ஓபன் மைண்டுடன் படத்தை பார்க்க வரவேண்டும்.
அடுத்த படத்திலும் நீங்கள் அஜித்துடன் இணைகிறீர்கள்? அதில் நாங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
அந்தப்படத்தில் ஆக்சன் காட்சிகளை குறைத்து விட்டு, அதிகமான வசனங்களை வைக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்தப் படத்தில் உலகளவில் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்னையை எடுத்து பேச இருக்கிறோம். ” என்று பேசியிருக்கிறார்.