Aditi Rao Hydari: ”வேற வேலை இருக்கு எனக்கு” ... சித்தார்த் உடனான காதல் வதந்திக்கு புதுவிளக்கம் அளித்த அதிதி..!
நடிகர் சித்தார்த்தை காதலிக்கிறார் என தகவல் பரவியுள்ள நிலையில், அதுகுறித்து நடிகை அதிதி ராவ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகர் சித்தார்த்தை காதலிக்கிறார் என தகவல் பரவியுள்ள நிலையில், அதுகுறித்து நடிகை அதிதி ராவ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் காதலிப்பது ஒன்றும் புதிதல்ல. காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வதும், பிரிவதும் தொடர்கதையான ஒன்றாகவே உள்ளது. ஆனால் காதலை மறுக்கும் பிரபலங்கள் குறித்த பேச்சுக்கள் மட்டும் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்த வகையில் நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வைரலாக பரவி வருகிறது .
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இவர் ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, தீயா வேலை செய்யணும் குமாரு, உதயம் என்.எச்.4, காவியத்தலைவன், அவள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் காற்று வெளியிடை மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி ராவ், இவர் செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் மகா சமுத்திரம் படத்தில் நடித்தது முதல் இவர்களுக்குள் காதல் முளைத்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம் அனைத்து இடங்களுக்கும் ஒன்றாகவே வலம் வரும் இந்த ஜோடி இதுவரை காதலை உறுதிப்படுத்தவில்லை. முன்னதாக பொன்னியின் செல்வன் பட இசை வெளியீட்டு விழாவுக்கு ஒன்றாக வருகை தந்து ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய சித்தார்த் - அதிதி ராவ் அடிக்கடி ஒருவரையொருவர் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அதிதியின் பிறந்த நாளுக்கு என் இதயத்தின் இளவரசி என சித்தார்த் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சித்தார்த் - அதிதி ஜோடி ‘எனிமி’ படத்தில் இடம்பெற்ற “டும் டும்” பாடலுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அடுத்ததாக இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சொல்லப்பட்டது.
ஆனால் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் பேச தான் செய்வார்கள். அவர்கள் பேசுவதை உங்களால் தடுக்க முடியாது. நான் சுவாரஸ்யமாக இருப்பதைச் செய்கிறேன். நான் செய்ய வேண்டிய அற்புதமான வேலைகள் நிறைய உள்ளது. நான் விரும்பும் இயக்குநர்களுடன் பணிபுரியும் வரை, மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னைப் பார்க்கும் வரை மகிழ்ச்சியாக இருப்பேன் எனவும் அதிதி ராவ் கூறியுள்ளார். இதன்மூலம் சித்தார்த் உடனான காதல் வதந்திக்கு அதிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.