HBD Vadivukkarasi : நீலாம்பரிக்கு முன்னாடியே ரஜினியை மிரட்டிய வேதவல்லி... நடிப்பு ராட்சசி வடிவுக்கரசி பிறந்தநாள் இன்று!
HBD Vadivukkarasi : உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு உதாரணமாக வாழும் நடிகை வடிவுக்கரசி பிறந்தநாள் இன்று...
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் ஏராளமான குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து வில்லத்தனத்தை கொப்பளிக்கும் வில்லியாக மிரட்டிய மிகவும் திறமையான நடிகை வடிவுக்கரசியின் பிறந்தநாள் இன்று. அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம் :
* பிரபலமான சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகை வடிவுக்கரசி. அவரின் பெரியப்பா தான் மிகவும் புகழ்பெற்ற இயக்குநரான ஏ.பி.நாகராஜன். பணக்கார குடும்பத்தை சேர்ந்த வடிவுக்கரசியின் திடீரென குடும்பம் பொருளாதார இழப்பு காரணமாக பல துயரங்களை சந்தித்தனர்.
* குடும்பத்தின் பொருளாதார சிக்கல் காரணமாக துணி கடையில் கேஷியராக வேலை செய்து கொண்டே சென்னை தூர்தர்சனில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்துள்ளார். சினிமா பின்னணி இருந்தும் வாய்ப்பு தேடி யாரையும் அணுகவில்லை. வாய்ப்பு தானாக வடிவுக்கரசியை நோக்கி வந்தது.
* ஏ.பி.நாகராஜன் எடுத்த 'வடிவுக்கு வளைகாப்பு’ திரைப்படம் வெளியான நாள் அன்று பிறந்ததால் அவருக்கு வடிவுக்கரசி என பெயரிடப்பட்டது.
* 'கிழக்கே போகும் ரயில்' படத்துக்காக வடிவுக்கரசி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரை 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் மூலம் அறிமுகமப்படுத்தினார் பாரதிராஜா. மாடர்ன் பெண்ணாக அந்த படத்தில் நடித்திருந்தார்.
* நடிப்பில் பெரிய அளவு ஆர்வம் இல்லை என்றாலும் குடும்ப சூழல் காரணமாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். டான்ஸ், ரொமான்ஸ் எல்லாம் வராது என்பதால் குணச்சித்திர கதாபாத்திரங்கள் தான் வேண்டும் என கேட்டு வாங்கி நடித்துள்ளார்.
* தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே இதுவரையில் தேர்வு செய்து நடித்துள்ளார். ஆனால் ஒருபோதும் அதிக சம்பளம் கேட்டு டிமாண்ட் செய்ததே கிடையாது.
* 'வா கண்ணா வா' படத்தில் சிவாஜியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்த வடிவுக்கரசி, 'முதல் மரியாதை' படத்தில் நெகட்டிவ் ரோலில் மனைவியாக நடித்திருந்தார்.
* ஏராளமான படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு என ஒரு தனி அடையாளத்தை பெற 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
*சிவாஜி முதல் தனுஷ் வரை அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் வடிவுக்கரசி நடித்துள்ளார்.
* 'அருணாச்சலம்' படத்தில் கொடூரமான வில்லியாக வேதவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவுக்கரசிக்கு பாராட்டுக்கள் குவிந்தது. அவரின் உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தும் இன்றும் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
* 1998ம் ஆண்டு இயக்குநர் சபாபதி தக்ஷிணாமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் இடையே இருந்த சில பிரச்சினை காரணமாக 2001ம் விவாகரத்து பெற்றார். அவரின் திரை வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்து இருந்தாலும் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது.
* வெள்ளித்திரை மட்டுமின்றி இன்றும் சின்னத்திரையில் மிகவும் பிஸியான ஒரு நடிகையாக வலம் வருகிறார் வடிவுக்கரசி.
* திரைப்படங்களில் வில்லியாக நடித்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு நல்ல உள்ளம் கொண்ட நல்ல ஒரு மனுஷியாக வாழ்ந்து வருகிறார்.